பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

கெடிலக்கரை நாகரிகம்


கலக்கும் இடங்களில் கழிமுகத் தீவுகள் இல்லாமை இவண் குறிப்பிடத்தக்கது. மலை உயரத் தொடங்கியபின் நெடுங் காலத்திற்குப் பின்னால் இந்த ஆறுகள் தோன்றியதால், இவற்றிற்கு இன்னும் கழிமுகத் தீவுகள் ஏற்படவில்லை; எனவே, இந்த ஆறுகள் காலத்தால் மிகவும் பிற்பட்டவை, என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆற்றின் படிவு, பள்ளத்தாக்கு, அரிமானம், அரிமானச் சுற்றின் இளமை - முதிர்ச்சி முதுமை நிலைகள், மேடு, திட்டு, தேய்வு முதலிய அமைப்புகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் மேற்கூறிய முடிவுகளைத் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின்படி பார்க்குங்கால், கழிமுகத் தீவுகளைப் பெற்றுள்ள கெடிலம் ஆற்றின் தொன்மை நன்கு புலப்படும்.

மரக்கல் (Wood Fossil)

கெடிலத்தின் தொன்மைக்கு மேலும் ஒரு சான்று கூறவியலும். கடலூருக்கு அண்மையிலுள்ள பாதிரிக் குப்பம் என்னும் சிற்றுரைச் சேர்ந்த முத்தால் நாயடு என்னும் முதியவர். தம் இளமைப் பருவத்தில், அப்பர் கரையேறின. பழைய கெடிலக்கரைப் பகுதியில் மண்தோண்டும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, கல்லாக மாறிய மரப்பகுதிகள் மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கக் கண்டதாகக் கூறினார் என்னும் செய்தியை முன்னர்ப் (பக்கம் - 54) பார்த்தோம்.

கல்லாக மாறிய மரத்தைப் பார்த்தால், வெளித் தோற்றத்திற்கு மரம் போலவே இருக்கும்; ஆனால் உள்ளமைப்பு கல்லாக இருக்கும். கல்லாக மாறிய மரம் பன்னூறாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டதாக இருக்கவேண்டும் எனப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நிலக்கரியின் வரலாறும் இது போன்றதுதானே! மரங்கள், புயலாலும் வெள்ளத்தாலும் புவி நடுக்கத்தாலும் கீழே விழுந்து, பன்னூறாயிரக் கணக்கான ஆண்டுகளாக மண்ணுக்கு அடியிலே கிடந்து மடிந்து மலைக்கல் போல் இறுகி மாறியதுதானே நிலக்கரி யென்பது? நிலக்கரி தன் முற்றாநிலை முற்றியநிலை ஆகியவற்றைக் கொண்டு பழுப்பாகவோ கறுப்பாகவோ இன்னும் வேறு விதிமாகவோ இருக்கிறது. ஆனால், மரக்கல் (Wood Fossil) மரத்தின் நிறமாகவோ கற்பாறையின் நிறமாகவோ இருக்கிறது. நிலக்கரி எரியும்; மரக்கல் எரியாது.

தமிழ் நாட்டில் சில விடங்களில் கல் மரங்களைக் காணலாம். புதுச்சேரிக்கு வடமேற்கே 21 கி.மீ. தொலைவில் செஞ்சியாறு எனப்படும் சங்கராபரணி ஆற்றங்கரையில்