பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

கெடிலக்கரை நாகரிகம்


கிடக்கிறதாம். அம்மரத்தை இந்தியப் புவியியல் (பூகர்ப்ப ) மாணவர்களும், அமெரிக்கா, ஆசுதிரேலியா, இங்கிலாந்து, பிரான்சு, சப்பான் முதலிய அயல்நாட்டுப் புவியியல் வல்லுநர்களும் வந்து பார்த்துவிட்டு மூக்கின்மேல் விரல் வைத்து வியக்கின்றனராம். அதற்குக் காரணமாக அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், தென்னிந்தியா கடலாக இருந்த சமயம் கரையில் இருந்த இம்மரம், கடல் அலைகளால் கடலில் அமிழ்ந்து நாளாவட்டத்தில் மண்ணில் புதைந்து கல்லாக மாறிவிட்டதென்று பூகர்ப்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப் பகுதி கடலாக இருந்தது என்பதற்கு அடையாளமாக இப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்களின் அபூர்வமான மண்டை ஓடுகளும் எலும்புகளும் காணப்படுகின்றன.”

இது அக் கட்டுரைப் பகுதி.

கல் மரங்கள் திருவக்கரையில் ஆற்றங்கரையிலும் சாத்தனூரில் ஓடைப் பகுதியிலும் இருப்பதைக் கொண்டும், அவற்றின் தோற்றத்தைப் பற்றிப் புவியியல் வல்லுநர்கள் கூறியிருப்பதாக ஆனந்த விகடனில் வந்துள்ள கட்டுரைப் பகுதிகளைக்கொண்டும், ‘இத்தகைய மாற்றங்கள் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் நிகழக்கூடும்’ என நாம் ஒருவாறு நுனித்துணரலாம். இதைத் தெளிவு செய்து கொள்ள ஒரு துணை நாடி ஐக்கிய அமெரிக்காவுக்குச் (U.S.A) செல்வோம்.

ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியாகிய கலிபோர்னியா, அரிசோனா ஆகிய இடங்களில் கல்மரக் காடுகளைக் காணலாம். அரிசோனா (Arizona) மாநிலத்தில் ‘ஃஆல்பரூக்’ (Holbrook) ஓடைப் பகுதிக்குக் கிழக்கே 34 கி.மீ. தொலைவில் 90.000 ஏக்கர் பரப்பில் 3 கல்மரக் காடுகள் காக்கப்பட்டு வருகின்றன. 6 அடி குறுக்கு விட்டமும் 100 அடி நீளமும் கொண்ட கல்லாக மாறிய அடி மரங்கள் பல உள்ளனவாம் அங்கே. இத்தகைய கல் மரங்களின் தோற்றத்தைப் பற்றி இந்தத் (Petrification) துறையில் வல்ல அறிஞர்கள் தொகுத்துக் கூறியுள்ள கருத்துக்களாவன:

‘மேட்டுப் பகுதிகளில் தோன்றி வளர்ந்து வந்த மரங்கள் ஓடைகளாலும் ஆறுகளாலும் இழுத்துக் கொண்டு வரப்பட்டுக் கரைப் பகுதிகளில் ஒதுக்கப்பட்டன. அவை நாளடைவில் மண்ணில் புதைந்து சில சூழ்நிலைகளால் கல்லாக