பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கெடிலக்கரை நாகரிகம்


எனவே, இதுகாறுங் கூறியவற்றால், ஆற்று வெள்ளப் பெருக்காலோ அல்லது கடலின் சீற்றத்தாலோ, ஆற்றங்கரைகளில் அல்லது கடற்கரைகளில் கல்மரங்கள் உருவாகும் என்பதும், கல்லாக மாறியுள்ள அம் மரங்கள் நூறாயிரக்கணக்கான ஏன், கோடிக்கணக்கான ஆண்டு கட்குமுன் தோன்றியிருக்க வேண்டும் என்பதும் புலப்படும்.

இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கெடிலத்தின் தொன்மையை நாம் கணிக்கமுடியும். கெடிலம் திசைமாற்றம் அடைவதற்குமுன், திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஒடிய பழைய ஆற்றுப் பாதைப் பகுதியில் அஃதாவது, அப்பர் கரையேறிய பகுதிக்குப் பக்கத்தில், மண்ணுக்கு அடியில் கல்மரத் துண்டங்கள் காணப்பட்டதாக முத்தால் நாயடு என்னும் முதியவரால் அறிவிக்கப்பட்டுள்ள செய்தியை இங்கே இணைத்துக் கொள்ள வேண்டும். கெடிலக்கரைப் பகுதியிலும் கல்மரத் துண்டங்கள் காணப்படுகின்றனவென்றால், அந்த ஆறு பல கோடி ஆண்டுகட்குமுன் தோன்றியதாக இருக்க வேண்டும். கோடிக்கணக்கில் படி மரக்கால் போட்டு அளக்க மனம் ஒவ்வாவிடினும், பல நூறாயிரக் (இலட்சக்) கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டது கெடிலம் என்பதையாவது ஏற்றுக் கொள்ளலாம். பல நூறாயிரக் கணக்கான ஆண்டுகட்குமுன் கெடிலம் ஆற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு ஒதுக்கப்பட்ட மரங்கள் அந்தப் பகுதியில் மண்ணுக்குள் மறைந்து, நாளடைவில் சிலிகா கரைசல் படிவால் இறுக்கம் பெற்றுக் கல்லாகி விட்டிருக்க வேண்டும். இந்தக் கல்மரத் துண்டங்கள் தாம் மண் தோண்டும்போது முத்தால் நாயுடு முதலிய தொழிலாளர் கண்களில் தென்பட்டுள்ளன. எனவே, வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் தோன்றியது கெடிலம் என்பது உறுதி.

முதியவருக்கு நன்றி

கெடிலத்தின் தொன்மையைக் கணிப்பதற்கு உதவியான கருத்தை வழங்கிய உயர்திரு. முத்தால் நாயடு அவர்கட்கு மிகவும் நன்றி செலுத்தவேண்டும். இந்தச் செய்தி சிறிதும் எதிர்பாரா வகையில் அவரிடமிருந்து கிடைத்தது. 1967 சனவரி ஏழாம் நாள், கெடிலக்கரைச் செய்திகளைத் தேடித் திரட்டும் வேட்டையில் முனைந்து, உந்து வண்டி (கார்) எடுத்துக்கொண்டு கெடிலக்கரைப் பகுதிகளில் நெடுந்தொலைவு சென்று