பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. தோற்றுவாய்

வெள்ளிக்கிழமை ஒரு புனித நாளாக இந்துக்களாலும் கிறித்தவர்களாலும், இசுலாமியர்களாலும் கொண்டாடப்படுகிறது. இப்புனித நாளில் உலக மக்களின் கண்களைக் குளமாக்கி விட்டு உயிர் துறந்தோர் மூவர். பாவேந்தர் பாரதிதாசன் கூறியபடி "தம்பெண்டு தம்பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தாமுண்டு" என்று தந்நல வாழ்வு வாழ்ந்து செத்தவர்கள் அல்லர் அம்மூவரும்; நீர்நிறைந்த ஊருணி போலவும், உள்ளூர்ப் பழுத்த பயன்மரம் போலவும், மருந்தாகித் தப்பாத மரத்தைப் போலவும் பிறர் பொருட்டு வாழ்ந்த பெரியார்கள்; இருள்நீக்க மெழுகுவர்த்தி தான் எரிந்து சாவதைப் போல, உலகம் வாழத் தம் வாழ்வை முடித்துக் கொண்ட பெருந்தகையாளர்கள்.

இம்முப்பெரும் பெரியார்களில் முதல்வர் அப்ரகாம் லிங்கன். இவர் பூத் என்ற நடிகனால் சுட்டுக் கொல்லப் பட்டார். இரண்டாமவர் இந்தியத் தாயின் அடிமை விலங்கைத் தகர்த்தெறிந்த காந்தியண்ணல், இவர் கோட்சே என்ற கொடியவனின் குண்டுக்கு இரையானர். இறுதியாக நம் கண்ணெதிரில் சில திங்கள்களுக்கு முன் உயிர்விட்ட சுதந்தர வீரன் ஜான் பிட்ஜெரால்டு கென்னடி.

அப்ரகாம் லிங்கனும், காந்தியண்ணலும் தாங்கள் மேற்கொண்ட அரும்பணிகளே வெற்றிகரமாக முடித்துவிட்டு வீறுநடை போட்டுச் செல்லும்போது கொல்லப்பட்டார்கள். ஆனால் கென்னடி தமது திருப்பணியைத் தொடங்கியவுடனே கொல்லப்பட்டார். அரும்பிலேயே முல்லை கருகி விட்டது. தாவி வரும் இளங்குழவியின் கழுத்தை நெரிப்பது போல், தன்னேரிலாத இளந்தலைனை மண்ணில் சாய்த்து விட்டனர். அடிமையிருள் நீக்கப் புறப்பட்ட விடிவெள்ளி விண்ணின்று வீழ்ந்துவிட்டது.