பக்கம்:கென்னடி வீர வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18. கென்னடியின் பொன்மொழிகள்

1. உலக அமைதியின் பொருட்டு நாம் தொடங்கியிருக்கும் பணி நூறு நாட்களில் முற்றுப்பெறாமல் போகலாம் ; ஆயிரம் நாட்களில் முற்றுப் பெறாமல் போகலாம் ; ஏன் ? நம் வாழ்நாளில்கூட முற்றுப் பெறாமல் போகலாம். இருப்பினும் இந்நற்பணியை நாம் துவக்கி வைப்போம்.

2. இது இடர்சூழ்ந்த உலகம் ; நிலையற்ற உலகம். இவ்வுலகில் எளிதாக வாழ்ந்துவிடலாம் என்று யாரும் எதிர்பார்க்கக் கூடாது.

3. எளியவர்கள் பாதுகாப்போடும், வலியவர்கள் நேர்மை யோடும் வாழத்தக்க அமைதியான புத்துலகம் ஒன்றைச் சமைக்க நம்மாலான பணியைச் செய்வோம்.

4. இன்று நடப்பது ஒரு கட்சியின் வெற்றிவிழாவன்று. மக்களின் உரிமை விழாவாகும். ஒன்றின் முடிவையும் மற்றென்றின் துவக்கத்தையும் குறிப்பிடும் விழாவாகும். மாறுதலேயும் புதுமையையும் வரவேற்கும் விழாவாகும்.

5. அதிகாரம் ஒருவனை அத்துமீறிய செயல்களில் ஈடு படுத்தும்போது, கவிதை அவனுடைய எல்லை எதுவென்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அதிகாரம் ஒருவனைக் குறுகிய புத்திக்காரனுக்கும் போது, கவிதை அவன் உள்ளத்தை விரிவடையச் செய்கிறது.

6, நான் கூறும் சமாதானம் மனித உரிமை பற்றிய சமாதானம் ; நான் குறிப்பிடும் உரிமை, போரினல் விளையும் அழிவைப் பற்றிய அச்சம் இல்லாமல் மக்களினம் வாழும் உரிமை. உயிரினங்கள் இயற்கை வழங்கியபடிகாற்றை உயிர்க்கும் உரிமை ; எதிர்கால மக்களினம் முழு உடல் நலத் தோடு வாழும் உரிமை.

7. மனித உரிமை அழியாமல் நிலைத்து நிற்க நாம் எந்தக் கடமையையும் ஏற்போம். எந்தத் துன்பத்தையும் பொறுத்துக்கொள்வோம். எந்த நண்பரையும் எதிர்ப்போம்.

8. முடிவை எதிர்பாராமல், எதிர்ப்புகளுக் கஞ்சாமல், இடர்களுக்கு உள்ளங் கலங்காமல் தன்னால் இயன்ற அளவு நேர்மைக்காகப் பாடுபடவேண்டும். அதுதான் மக்களினத்தின் அடிப்படை ஒழுக்கம்.