88 / புலவர் செ.இராசு
பொழுது பெருமானடிகள் நாமத்திலே அக்கோயிலைப் புதுக்குவித்தார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.
மேற்குச் சுவர்க் கல்வெட்டு போசள மன்னன் வீரவல்லாள தேவர் காலத்தில் ஆங்கிரச வருடம் ஆடிமாதம் 2ஆம் தேதி (29–6–1332) இக்கோயிலில் நடைபெற்ற வழக்கொன்றையும் அது தீர்ந்த விவரத்தையும் விரிவாகக் கூறுகிறது.169 தெண்ணாயக்கர் கோட்டைக்குத் தெற்கு ஆறுநாட்டு நாட்டவர் அவ்வழக்கைத் தீர்த்துள்ளனர்.170
சமணர்கள் ஆலத்தூர் முழுவதும் சமண தேவருக்குச் சேரமான் சக்கரவர்த்தியால் கொடுக்கப்பட்டது என்று கூறினர்.
சைவர்கள் ஆலத்தூரை அவிநாசி ஆளுடையாருக்குத் திரிபுவனச் சக்கரவர்த்தி கொடுத்தார் என்று கூறினர். இரு சாராரும் ஆலத்தூருக்கு உரிமை கொண்டாடினர்.
இவ்வழக்கு ஆறுநாட்டுச் சபைக்கு விசாரணைக்காகச் சென்றது. சோமப்பத் தெண்ணாயக்கன் முன்பாகவும், ஆறு நாட்டார் முன்பாகவும் முறைப்பாடு செய்தனர்.
இரு சாராரும் சான்றாகத் தத்தம் சாசனத்தைக் காட்டினர். இரண்டு சாசனங்களையும் பார்த்து இரண்டும் சரியான பழைய சாசனங்களாகத் தெரியவே ஆலத்தூரை இரண்டு கோயிலுக்கும் பொதுவாகச் செய்து மறு சாசனம் எழுதித் தரப்பட்டது.
14ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டில் நடைபெற்ற நீதி முறையை இந்தக் கல்வெட்டு மிகவும் தெளிவாக விளக்குகிறது.
சீனாபுரம்
ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை – திங்களூர்ப் பாதையில் 7 கி.மீ. தொலைவில் உள்ள மமுட்டித்தோப்பு என்னுமிடத்தில் பகவான் ரிஷபதேவர் கோயில் உள்ளது.171 முதல் தீர்த்தங்கரருக்கு எடுக்கப்பட்ட சிறு கோயில்.
அரை மீட்டர் கல் கட்டிடத்தின் மேல் செங்கல்லாலும் சுதையாலும் கட்டப்பட்ட கோயில். சுதை வேலைப்பாட்டிலான சில உருவங்கள் உள்ளன. அவை அழிந்த நிலையில் உள்ளன. தெற்குப் பார்த்து அமைக்கப்பட்ட கோயில் 9 மீட்டர் நீளமும் 4½ மீட்டர் அகலமும் உடையது. கருவறையும் ஒரு முன்மண்டபமும் மட்டுமே கொண்ட சிறு கோயில். கோயிலின் முன் 1 மீட்டர் நீளம் அகலமுள்ள சமசதுர மேடை ஒன்றுள்ளது. கோயிலின் முன்னர் 5 மீட்டர் தூரத்தில் பலிபீடம் உள்ளது.