கொங்கு நாட்டில் சமணம் / 89
கருவறையில் 1 மீட்டர் உயர அளவுள்ள ரிஷபதேவர் எழுந்தருளியுள்ளார். 2 நாகர் சிற்பங்கள் உள்ளன. கோயில் கதவு எப்பொழுதும் திறந்தவண்ணம் இருக்கிறது. பவணந்தி முனிவர் வாழ்ந்து வழிபட்ட கோயில். நன்னூல் பாயிரத்தில் இச் சீனாபுரம் ‘பொன்மதிற் சனகை’ என்று குறிக்கப்பட்டுள்ளது.
ஊர் நிருவாக அலுவலர் ‘பஸ்தி ஆதீசுவரர்’ என்று குறித்துள்ளார். பஸ்தி என்பது சமணக் கோயிலைக் குறிக்கும். 65 ஆண்டுகட்கு முன்னர் விசயமங்கலத்திலிருந்து சூரய்யர் என்பவர் வாரம் ஒரு முறை வந்து பூசை செய்து செல்வார் என்று கூறுகின்றனர்.
அருகேயுள்ள தோட்டத்தில் வாழும் நாயக்கர் முன்பு நாள் தோறும் தீபம் ஏற்றுவாராம். இப்போது பூசையும் இல்லை. தீபம் ஏற்றப்படுவதும் இல்லை. உள்ளூர்ப் பொது மக்களைக் கோயிலைப் பற்றிக் கேட்டால் ‘சீனாக்காரர் கோயில்’, ‘சர்க்கார் கோயில்’ என்று கூறுகின்றனர்.172 அப்படி அங்கு ஒரு புகழ்வாய்ந்த பழங்கோயில் இருப்பது பற்றி யாரும் எந்த எண்ணமும் இல்லாமல் இருக்கிறார்கள்.
சீனாபுரத்தின் அருகில் உள்ள நமிட்டிப் பாளையத்தில் 27 ஏக்கர் 61 சென்ட் நிலமும், தலையம்பாளையத்தில் 22 ஏக்கர் நிலமும் இக்கோயிலுக்கு இருந்ததென்று கூறுகிறார்கள்.173
திங்களூர்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் திங்களூர் அருகே தென்புறம் சுங்கக்காரன்பாளையம் செல்லும் வழியில் உள்ள கோயில் தோட்டத்தின் நடுவே கிழக்குப் பார்த்தவண்ணம் புஷ்பதந்த தீர்த்தங்கரர் கோயில் உள்ளது. புஷ்பதந்த தீர்த்தங்கரர் 24 சமண தீர்த்தங்கரரில் ஒன்பதாமவர்.
கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் எனக் கோயில் மூன்று பாகங்களை உடையது. புஷ்பதந்தர் சிற்பம் 45 செ.மீ. உயரம் உள்ள சிறு உருவம். மகாமண்டபத்தில் தென்சுவர் மத்தியில் ஒரு சிறு அறையில் பிரம இயக்கனுடைய உருவம் இருக்கிறது.
10ஆம் தீர்த்தங்கரராகிய சீதளநாத தீர்த்தங்கரர் உருவமும், குதிரை வாகனமும் உள்ளதாக 40 ஆண்டுகட்குமுன் கோவைகிழார் எழுதியுள்ளார். இப்போது அவை அங்கு இல்லை.
மகா மண்டபத்தில் 4 தூண்கள் உள்ளன. அத்தூண்களில் துவாரபாலகர், குதிரை, அன்னம், பசு, முனிவர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முக்குடை, பார்சுவநாதர், கோமடேசுவரர், மகாவீரர்,