உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொங்கு நாட்டில் சமணம் / 91

மூன்று காலச் சந்தி பூசைக்கு அறிகணிநல்லூரைக் கொடையாகக் கொடுத்த விவரம் கூறப்பட்டுள்ளது.177

இக்கல்வெட்டின் புஷ்பதந்த தீர்த்தங்கரர் பூமேந்திரர் என்று குறிக்கப்படுகிறார். அறிகணிநல்லூர் என்பது தொண்டை நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூரை அடுத்துள்ள அறையணிநல்லூர் என்னும் சமணத் தலமாக இருக்கலாம்.

பலிபீடத்தில் உள்ள கல்வெட்டு வேதம் பாடும் பிச்சப் பெருமாள் மகன் முனிவிலிடு முப்பிரான் என்பவர் அப்பலிபீடத்தை அமைத்தார் என்று கூறுகிறது.178 கோயில் புதிய திருப்பணியில் உருவாகிறது.

பூந்துறை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு – அறச்சலூர் சாலையில் 12 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் பூந்துறை. கொங்கு 24 நாடுகளில் முதன்மையாகக் கருதப்படும் நாடான ‘பழம்பூந்துறை’ நாட்டின் தலைநகர்.

பூந்துறையில் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வடபுறம் உள்ள பழைய சந்தை மேட்டில் பார்சுவநாத தீர்த்தங்கரர் கோயில் உள்ளது. தெற்கு நோக்கி உள்ள கோயில். முன் மண்டபத்துடன் கூடிய கருவறை மட்டும் உள்ள சிறுகோயில். ஈரோட்டில் வாழும் வடமாநிலச் சமணர்கள் மிக விரிவான திருப்பணியைச் செய்துள்ளனர். 8 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் உள்ள கோயில்.

திகம்பர சமணக் கோயிலான பூந்துறை பார்சுவநாத தீர்த்தங்கரர் கோயிலுக்குக் கோயம்புத்தூர், ஈரோடு நகர்களில் உள்ள சுவேதாம்பர சமண சமயத்தவர்களும் இப்போது வந்து வணங்கிச் செல்கின்றனர். இவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதியிலிருந்து அண்மையில் வணிகத்தின் பொருட்டு இப்பகுதிகளில் குடியேறியவர்கள் ஆவர்.

அதனால் முன்பு அணியாத அழகராகத் திகழ்ந்த பார்சுவநாதர் இப்போது ஆடை அணிகலன்களுடன் திகழுகிறார். இவ்வாறான மாற்றத்திற்குப் பூந்துறைத் திகம்பர சமணக் குடும்பம் உடன்பட்டுவிட்டது. ஆனால் விசயமங்கலம் திகம்பர சமண சமயக் குடும்பத்தார் இம்மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

இக்கோயில் சக ஆண்டு 1423 ஆம் ஆண்டு (கி.பி.1508) திருப்பணி செய்யப்பட்டதாகக் கிழக்குச் சுவர்க் கல்வெட்டுக் கூறுகிறது.

இங்கு பார்சுவநாதருடன் இயக்கி பத்மாவதியின் உருவச் சிலையும் உள்ளது. கொங்கு மண்டல சதகம் பாடிய கார்மேகக் கவிஞர் இப்பார்சுவநாதர் பற்றிப் பாடல் ஒன்று இயற்றியுள்ளார்.