உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104 / புலவர் செ.இராசு

கொங்கு நாடு என்னும் நூலை 1933 ஆம் ஆண்டு எழுதிய தி.அ. முத்து சாமிக் கோனார் தாராபுரத்தில் இருந்த சமணச் சிற்பங்கள் பற்றித் தம் நூலில் எழுதியுள்ளார்.203

‘தாராபுரத்தின் வடக்கே 1 பர்லாங்கில் வயலிடையே ஒரு திட்டில் யட்சி, சந்திரப்பிரப தீர்த்தங்கரர் திருவுருவம் 5 அடி உயரத்தில்
நல்ல வேலைப்பாடாகவும் அனேக சிலைகள் உடைந்தும் அநேக
சிலைகள் புதைந்தும் கிடக்கின்றன.’

என்பது கோனார் எழுதியிருக்கும் பகுதியாகும். இன்று தாராபுரத்தில் சமணச் சிற்பம் எதுவுமில்லை.

பழங்கரை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் பழங்கரை என்னும் ஊரில் சமணச் சிற்பம் ஒன்றுள்ளதாகக் கோவைகிழார் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார் தம் நூலில் எழுதியுள்ளார்.204 இன்று பழங்கரையில் சமணச் சிற்பம் எதுவுமில்லை.


6. கல்வெட்டுகள் காட்டும் சமணத் தலங்கள்

கொங்கு நாட்டில் சில ஊர்களில் சமண சமயச் சின்னங்களான கோயில்களோ, சிலைகளோ, பிற பொருள்களோ எதுவும் இன்றி கிடைக்கும் கல்வெட்டுக் குறிப்புகளால் மட்டுமே அங்குச் சமண சமயம் சிறப்புற்றிருந்த நிலை பெறப்படுகிறது. சமண சமயம் பற்றிய குறிப்புகள் உள்ளூர்க் கல்வெட்டுகளிலும், பிற ஊர்க் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இருந்து பெறப்பட்டன.

அம்மன் கோயில்பட்டி

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் வரலாற்றுப் புகழ்பெற்ற தாரமங்கலம் அருகில் அம்மன்கோயில்பட்டி என்ற ஊர் உள்ளது. அங்குள்ள உப்பாற்றங்கரையில் பாறையொன்றில் செயற்கையாக அமைக்கப்பட்ட சுனை ஒன்றுள்ளது.

அச்சுனையை ஒட்டி கி.பி.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துக்களில் அமைந்த கல்வெட்டு ஒன்றுள்ளது.205 அது இரண்டு வரிகளாக அமைந்துள்ளது. அதன் மூலம் வியக்கன் கோபன் கண தேவன் என்பவர் அந்தச் சுனையை அமைத்த விவரம் தெரிகிறது. அவர் தந்தையின் பெயர் பரம்பன் கோகூர் கிழார் என்றும் காணப்படுகிறது.206