உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொங்கு நாட்டில் சமணம் / 105

கிழார் என்பது நில உடைமையாளர்களான உழவர் பெருமக்களுக்குச் சங்க காலத்தில் வழங்கி வந்த பெயர். கோவூர் கிழார், குறுங்கோழியூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், அரிசில் கிழார் போன்ற பலர் பெயர்களைச் சங்க இலக்கியம் மூலம் காணுகிறோம். கோகூர் கிழார் என்றால் கோகூருக்கு உரிமையுடைய உழவர் பெருமகன் என்பது பொருள்.

இக்கல்வெட்டில் சமண சமயம் பற்றிய குறிப்பு இல்லை. எனினும் சமண முனிவர்கட்கென்றே இந்தச் சுனை அமைக்கப்பட்டதென்று அருகிலுள்ள சிதைந்த கல் படுக்கைகளால் அறிகின்றோம்.

வியக்கன் என்ற பெயர் அமைப்பும் ‘இயக்கன்’ என்ற சமண சமயப் பெயரோடு ஒப்புமை உடையதாக இருப்பதும் குறிக்கத்தக்கது. வியக்கன் கோபன் கணதேவன் சமண சமயத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

சமண முனிவர்கள் தங்கிய இயற்கைக் குகைத் தளங்களின் அருகே இயற்கையாகவே சுனைகள் அமைந்திருக்கும். இங்கு இயற்கைச் சுனை இல்லாத காரணத்தால் வியக்கன் கோபன் கணதேவன் சமண முனிவர்கட்குச் சுனை அமைந்திருக்கலாம்.

‘தொட்டனைத்தூறும் மணற்கேணி’ என்ற குறளின்படி207 தொடு என்ற அடிச்சொல்லால் எழுந்த தொட்ட என்ற சொல் சுனை தோண்டியதைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்புக்குரியது.

ஆத்தூர்

கரூர் மாவட்டம் கரூர் வட்டம் புகழூருக்கு அருகில் ஆத்தூர் என்னும் ஊர் உள்ளது. புகலூர் ஆறுநாட்டார்மலை தமிழ்க் கல்வெட்டில் யாற்றூரில் வாழ்ந்த மூத்த சமண முனிவராகிய செங்காயபன் என்பவருக்குச் சேர மன்னன் கோ ஆதன் செல்லிரும்பொறை பேரனும் பெருங்கடுங்கோன் மகனும் ஆன இளங்கடுங்கோ இளவரசன் ஆகும் போது கல்படுக்கைகள் வெட்டித் தானமாகத் தந்த விவரம் கூறப்படுகிறது.208

சேர மன்னர் கல்வெட்டில் குறிக்கப்பட்ட யாற்றூர் அருகில் உள்ள இன்றைய ஆத்தூராக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.209 அப்படியானால் ஆத்தூர் சமண முனிவர் பலர் தங்கியிருந்த ஊராக இருக்க வேண்டும்.