106 / புலவர் செ.இராசு
கரூர்
கரூர் என்பது வஞ்சி என்ற பெயருடன் ஒரு காலத்தில் சேர மன்னர் வாழ்ந்த தலைநகராக இருந்துள்ளது. அதைக் குறிக்கும் வகையில்
மாகோதை
மாக்கோக்கோதை
என்ற பெயர்கள் பொறிக்கப்பட்ட சேரர் காசுகள் பல கரூர் அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியத்திலும் கரூர் சிறப்பிக்கப்படுகிறது. பன்னிரண்டு சங்கப் புலவர்கள் கரூரில் வாழ்ந்துள்ளனர்.
பழங்காலத்தில் சமணர்களும் கரூரில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று புகழூர் ஆறுநாட்டார்மலைக் கல்வெட்டு மூலம் தெரிகிறது. கரூரில் வாழ்ந்த பொன் வாணிகன் அத்தி என்பவன் சமண முனிவர்கட்காகக் கல் படுக்கைகளை வெட்டித் தானமாக அளித்துள்ளான். இதைக் குறிக்கும் கல்வெட்டில் கரூர் ‘கருஊர்’ என்று எழுதப்பட்டுள்ளது.210
களந்தை
கோவைக்குத் தெற்கே திருப்புகழ் பாடல் பெற்ற பொன்மலை வேலாயுதசுவாமி வீற்றிருக்கும் கிணத்துக்கடவுமலைக்கும், பல்லடம் வட்டத்தில் உள்ள தென்சேரிகிரிக் குன்றுக்கும் இடையே பல்லடம் – பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள பழமையான ஊர் களந்தை.
இங்குள்ள ஆதீசுவரர் கோயில் ஒரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். ஆதீசர், ஆதிநாதர் என்பது முதல் தீர்த்தங்கரர் பெயர். சில சமண தீர்த்தங்கரர் உருவங்கள் அக்கோயிலில் உள்ளன. நேமிநாதன், வச்சணந்திமாலை என்னும் வெண்பாப்பாட்டியல் ஆகிய நூல்களை இயற்றிய குணவீரபண்டிதர் வாழ்ந்த ஊர் களந்தை.
சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளிக் கல்வெட்டில் மின்னாம் பள்ளித் தேவருக்குக் கொடை கொடுத்தவர் பெயர் ‘களந்தை நீலன்’ என்று காணப்படுகிறது. இக்களந்தை மேற்கண்ட பொள்ளாச்சி வட்டக் களந்தையாகும்.
செங்கப்பள்ளி
சென்னை – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் விசயமங்கலத்திற்கும் அவிநாசிக்கும் இடையில் உள்ள ஊர். கொங்கு நாட்டில் மின்னப்பள்ளி, விண்ணப்பள்ளி, பருத்திப்பள்ளி, பரன்சேர் பள்ளி