உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொங்கு நாட்டில் சமணம் / 109

அக்கல்வெட்டில் கோலார் நாடு, புந்நாடு ஆகிய நாடுகள் குறிப்பிடப்படுகின்றன. சேர மன்னன் இரவிகோதை காலத்தில் அவ்வூர்ச் சமணப் பள்ளிக்கு அளிக்கப்பட்ட கொடையை அக்கல்வெட்டுக் குறிக்கிறது. அக்கல்வெட்டில் அத்திகோசம் என்ற தொடர் காணப்படுகிறது. அத்திகோசத்தார் என்பவர்கள் பண்டைய தமிழகத்தில் இருந்த வணிகக் குழுவினரைக் காக்கும் யானைப் படையினர் ஆவர்.216

கல்வெட்டின் பின்பக்கம் யானைப்படை, குதிரைப்படை உட்பட வணிகக் குழுவின் குறிகள் பல பொறிக்கப்பட்டுள்ளன.

நல்லூரிலோ அல்லது அருகிலுள்ள விண்ணப்பள்ளியிலோ கி.பி.10ஆம் நூற்றாண்டில் சமணப் பள்ளி ஒன்று இருந்திருக்க வேண்டும். சேர மன்னர் கோ இரவி கோதை காலத்தில் வணிகக் குழுவினரும் அவர்களின் காவல் படையினரான அத்திகோசத்தாரும் அதற்குக் கொடை வழங்கியிருக்கலாம் என்பது இக்கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.

வானவன் மாதேவி

நாமக்கல் மாவட்டத்து நாமக்கல்லில் உள்ள முனியப்பன் கோயில் அருகேயுள்ள அகன்ற பாறையில் ஒரு கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி.13ஆம் நூற்றாண்டில் கோனேரின்மை கொண்டான் என்ற பட்டப் பெயர் கொண்ட ஓர் அரசன் காலத்தில் அவ்வூர் வைத்யபுரந்தரர் அங்க வைத்தியன் சவர்ணன் பாரஸ்ரீயன் ஆதித்த தேவன் திருவம்பலப் பெருமாள் என்பவருக்கு ஏழுர் நாட்டு வானவன் மாதேவி என்ற ஊரில் வைத்தியக் காணி நிலம் அளித்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது.217

வானவன் மாதேவி என்பது நாமக்கல் அருகில் உள்ள ஊர். வைத்தியனுக்கு அளிக்கப்பட்ட நிலத்தைக் குறிப்பிடும்போது

‘பழந் தேவதானம் திருவிடையாட்டம் பள்ளிச்சந்தம்
பட்டர்கள் இறையிலி நீக்கி’

என்ற தொடர் காணப்படுகிறது. வானவன் மாதேவியில் சமணப்பள்ளிக்கு நிலம் அளிக்கப்பட்ட செய்தி பள்ளிச் சந்தம் என்ற தொடர் மூலம் தெரிய வருகிறது.

பெரிய பாளையம்

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சர்க்கார் பெரிய பாளையத்தில் உள்ள சுக்ரீவேசுவரர் கோயிலில் உள்ள வீரபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் முகுந்தனூர் குரக்குத்தளி