58 / புலவர் செ.இராசு
2. சமணம் செழித்தல்
தவப்பள்ளிகள்
கி.மு.3ஆம் நூற்றாண்டில் கருநாடகப் பகுதியிலிருந்து அதன் அண்டை நாடான கொங்கு நாட்டில் சமண சமயம் பரவியது. சிரவணபெளகொளாவில் நிர்வாணகதி அடைந்த பத்திரபாகு முனிவரின் சீடராகிய விசாகாச்சாரியாருடன் கொங்கு நாட்டுக்கு வந்த சமண முனிவர்களும், அவர்களுக்குப் பின் வந்த சமண முனிவர்களும் பல குன்றுகளில் உறைந்தனர்.58 ஊருக்குப் புறம்பாய் இருந்த இயற்கைக் குகைத் தளங்களில் இருக்கைகளை அமைத்துக்கொண்டு அச்சமயப் பெரியார்கள் வாழ்ந்தனர்.
இத்தகைய மலைகளில் சமணப் பெரியார்களின் நினைவாக அரசர்களும், அவர்களின் உயர் அலுவலர்களும், பொதுமக்களும் அமைத்துக் கொடுத்த கல் படுக்கைகளைக் காணலாம்.59 அவைகளில் சிலவற்றில் யார் யாருக்காக அப்படுக்கைகளை எவர் அமைத்தார்கள் என்ற விவரங்கள் பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் வெட்டப்பட்டிருக்கும்.60
இத்தகைய தவப்பள்ளிகளில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் மக்களுக்கும், அவர்களுக்குக் கீழிருந்த மாணாக்கர்களுக்கும், துறவிகளுக்கும் அறம் உரைத்து வாழ்ந்திருக்கிறார்கள். சமணப் பெரியார்களில் ஆண், பெண் இருபாலாரும் இருந்தனர். ஆண்பாலார், குரவர், குரவடிகள் என்றும், பெண்பாலார் குரத்தி, குரத்தியார் என்றும் அழைக்கப்பட்டனர்.61
இத் தவப்பள்ளிகளில் பின்னாளில் சமணப் பெரியார்களிடம் அன்பு கொண்ட பலரும் செய்வித்த தீர்த்தங்கரர் உருவங்களைக் காணலாம். அவைகள் ‘தரிசன பிம்பங்கள்’ எனப்பட்டன. அவைகட்குச் செய்யப்பட்ட வழிபாடுகள், அளிக்கப்பட்ட கொடைகள், நடைபெற்ற விழாக்கள் ஆகியவைகளை அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிகின்றோம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சமணப் பெருமக்கள் அங்கு வந்து வழிபட்ட விவரமும் அக்கல்வெட்டுகளால் பெறப்படுகிறது.
பொது மக்களுக்கும் இத்தவப் பள்ளிகளில் வாழ்ந்த சமண சமயப் பெரியார்கட்கும் அதிகமான தொடர்பு இருந்ததையும், இவர்கள் வாழ்ந்த பள்ளிகட்கு மக்கள் பலர் நாடி வந்தார்கள் என்பதையும் அறிகிறோம்.