உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொங்குநாடும் சமணமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொங்கு நாட்டில் சமணம் / 69

கோயில் இருக்கிறது. ஆனால் நேமிநாதர் சிலையையும் கூசுமாண்டினி சிலையையும் விசயமங்கலம் சமணக் கோயிலில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள்.90

சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலுள்ள ஆவணம் ஒன்று அரசண்ணாமலையை அதிசயாமலை என்று குறிக்கிறது. அங்குள்ள நேமிநாதர் இயக்கி கூசுமாண்டினி இயக்கியைப் புகழ்ந்து ஒரு பாடலும் காணப்படுகிறது.91

அரசண்ணாமலையில் உள்ள இயக்கி கூசுமாண்டினியைக் கொங்கம்பாளையத்து மக்களும், அருகிலுள்ள ஊர்மக்களும் ‘அரசாத்தாள்’ என்று அழைக்கின்றனர். கொங்கம்பாளையத்து மக்கள் தங்கள் பெண் குழந்தைகட்கு அரசாத்தாள் என்று பெயர் வைக்கின்றனர். மலை மேல் சிவலிங்கப் பிரதிட்டை செய்திருந்தாலும் சுற்று வட்டார மக்கள் மலை மேல் இன்றும் அரசாத்தாள் குடிகொண்டிருப்பதாகவே கூறுகின்றனர்.

தீர்த்தங்கரர் அனைவரும் உயர் அரச குடும்பத்தில் பிறந்தவர்கள். கூசுமாண்டினியை ‘அரசாத்தாள்’ என அழைப்பது போல் தீர்த்தங்கரர் நேமிநாதரை ‘அரசண்ணல்’ என அழைத்திருக்கலாம். அரசண்ணல் மலை அரசண்ணாமலை என மருவியிருக்கலாம்.

‘கொங்க தேச ராசாக்கள்’ நூலில் கங்க மன்னர்கள் கொங்கு நாட்டில் அரிஷ்டணன் என்ற சமணருக்குக் கொடுத்த கொடை பேசப்படுகிறது. அரிஷ்டணன்மலை அரசண்ணாமலை எனவும் மாற்றம் பெற்றிருக்கலாம்.

நேமிநாதருக்கு ‘அரிஷ்டநேமி’ என்ற பெயரும் உண்டு. நேமிநாதர் அரிஷ்டநேமி கோயில் கொண்டுள்ள காரணத்தால் அரிஷ்டநேமிமலை என்ற பெயர் அரசண்ணாமலை என்று மருவியிருக்கலாம். உண்மைக் காரணம் தெரியவில்லை.

கோவை கிழார் தான் கண்ட அம் மலைக் காட்சியைப் பின் வருமாறு வருணித்துள்ளார்.92

‘முன் புகைவண்டியில் செல்லும்போதெல்லாம் விசயமங்கலம் நிலையம் அணுக அணுக அம்மலை மீதிருந்த ஜைன ஆலயம் வெள்ளை வெளேரென்று காட்சி தந்து கொண்டிருந்தது. தற்போது அக்காட்சி தருவதில்லை. பச்சை மலைமீது வெள்ளைச் சிகரம் ஒரு சிறந்த காட்சியை அளிக்குமல்லவா? பழைய கோயில் அழிந்ததும் அவ்வழகிய காட்சி மறைந்தது.’