பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1

நாட்டுச் சரித்திரத்தை யறிவதற்கு இன்னொரு முக்கிய கருவி நூலாக இருக்கிறது.

அகநானூறு :

அகநானூறு, அகப்பொருளாகிய காதற்செய்திகளைக் கூறுகிற நூல். ஆகையால் அதில் பொதுவாகச் சரித்திரச் செய்திகளும் வரலாற்றுச் செய்திகளும் இடம் பெறுவதில்லை. ஆனால், அச்செய்யுள்களைப் பாடிய புலவர்களில் சிலர், தங்களை ஆதரித்த அரசர், சிற்றரசர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளை இந்தக் காதற் செய்யுள்களில் புகுத்திப் பாடியுள்ளனர். இப்படிப்பட்ட வரலாற்றுச் செய்திகள் சில, கொங்கு நாட்டு வரலாற்றையறிவதற்கு உதவியாக இருக்கின்றன. எனவே அகநானூற்றுச் செய்யுள்களும் நமது சரித்திர ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கின்றன.

நற்றிணை நானூறு :

அகநானூற்றைப் போலவே, நற்றிணை நானூறும் அகப் பொருளைக் கூறுகிறது. அகநானூற்றுச் செய்யுள்கள் சில அரசர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுவதுபோல நற்றிணைச் செய்யுட்கள் சிலவற்றிலும் வரலாற்றுச் செய்திகள் கூறப்படுகின்றன. அதனால் நற்றிணைச் செய்யுள்களில் சில கொங்கு நாட்டு வரலாற்றுக்குத் துணை செய்கின்றன. குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற வேறு சில அகப்பொருள் நூல்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் காணப்படுகிற வரலாற்றுச் செய்திகள் இந்நூலில் இடம் பெறுகின்றன.

சிலப்பதிகாரம் :

இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும் இந்த நூலை எழுதுவதற்குத் துணையாக இருந்தது. பதிற்றுப்பத்தில் கூறப்படுகிற சேரர்களைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன. ஆகவே, இந்த வரலாறு எழுதுவதற்கு இது துணை செய்கின்றது. மேலும், கொங்கு நாட்டுப் பொறைய அரசர்களின் காலத்தைக் கணித்து நிறுவுவதற்கும் சிலம்பு பெரிய உதவியாக இருக்கிறது.