பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

செய்யுளின் அடிக்குறிப்பு, ‘சேரமான் மாந்தரஞ்சேரல் இரும் பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனைப் பாடியது’ என்று கூறுகிறது. (பொருதவழி-போர் செய்த போது. துப்பு-பலம்.)

இவன் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்டவன் தலை யாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். அந்தப் பாண்டியனுடன் யா.சே.மா.சே. இரும்பொறை போர் செய்தான். போர் எந்த இடத்தில் நடந்தது என்பது தெரியவில்லை அந்தப் போரில் இவன் தோற்றது மட்டுமல்லாமல் பாண்டியனால் சிறைப் பிடிக்கப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டான். ஆனால், எவ்விதமாகவோ சிறையிலிருந்து தப்பி வெளிவந்து தன்னுடைய நாட்டை யரசாண்டான். இந்தச் செய்தியைக் குறுங் கோழியூர் கிழார் இவனைப் பாடிய செய்யுளிலிருந்து அறிகிறோம். (புறம்-17) அந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு, பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ் செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை வலிதிற்போய்க் கட்டி வெய்தினானைப்பாடியது.” என்று கூறுகிறது. (பிணியிருந்த-கட்டப்பட்டிருந்த, சிறைப் பட்டிருந்த கட்டில் எய்தினானை-சிம்மாசனம் ஏறியவனே. கட்டில்-சிம்மாசனம்.)

கருவூர்ப் போர்

யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் தோல்வியடைந்ததை யறிந்தோம். இவன் காலத்தில் சோழ நாட்டைச் சில சோழ அரசர்கள் அரசாண்டு வந்தனர். அவர்களில், உறையூரிலிருந்து அரசாண்ட கிள்ளிவளவனும் ஒருவன். இந்தக் கிள்ளிவளவனைப் பிற்காலத்தவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்றும் குராப் பள்ளித் துஞ்சிய