பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126


வைக்கப்பட்டான். அப்போது கணைக்கா லிரும்பொறையின் புலவராகிய பொய்கையார் இவனை விடுவிப்பதற்காகச் செங்கட் சோழன்மேல் 'களவழி நாற்பது' என்னும் நூலைப் பாடினார்.

குடவாயிற் சிறைச்சாலையிலிருந்த கணைக்காலிரும்பொறை நீர்வேட்கை கொண்டு 'தண்ணீர் தா' என்று கேட்டபோது சிறைச்சாலையிலிருந்தவர் உடனே தண்ணீர் தராமல் காலங்கழித்துக் கொடுத்தனர். கணைக்காலிரும் பொறை அந்நீரை யுண்ணாமல் ஒரு செய்யுளைப் பாடித் துஞ்சினான் (துஞ்சினான்உறங்கினான்). அந்தச் செய்யுள் புறநானூற்றில் 74-ஆம் செய்யுளாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. அச்செய்யுள் இது:


குழவி பிறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளற் றப்பார்.
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரத் துண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே.

இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு இவ்வாறு கூறுகிறது.

'சேரமான் கணைக்கா லிரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தா வென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு'

(திருப்போர்ப்புறம்-போர் என்னும் ஊருக்கு அருகில், பொருது-போர் செய்து. பற்றுக்கோட்பட்டு-பிடிக்கப்பட்டு, பெயர்த்து பெற்று-காலந் தாழ்ந்துப் பெற்று. துஞ்சிய-இறந்த, தூங்கின.)