பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


பொறை பிறகு சோழ நாட்டில் போர் என்னும் இடத்தில்[1] சென்று செங்கணானுடன் போர் செய்தான். அந்தப் போரில் அவன் சிறைப்பட்டான். சிறையிலிருந்தபோது பொய்கையார் களவழி பாடினார். இச்செய்தியைக் களவழி நாற்பதின் பழைய உரைகாரர் கூறுவதிலிருந்து அறிகிறோம். அவர் கூறுவது 'சோழன் செங்கணானும் சேரமான் கணைக்கா லிரும்பொறை யும் திருப்போர் புறத்துப் பொரு துடைந்துழிச் சேரமான் கணைக்கா லிரும்பொறையைப் பற்றிக் கொண்டு சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று.”

புறம், 74-ஆம் பாட்டின் அடிக்குறிப்பு துஞ்சினான் என்று கூறுகிறது. துஞ்சினான் என்பதற்கு இறந்து போனான், தூங்கினான் என்று இரண்டு பொருள்கள் உண்டு. களவழி நாற்பதின் இறுதி வாசகம் 'பொய்கையார் களம்பாடி வீடு கொண்டார்' என்று கூறுகிறது. அதாவது களவழி நாற்பது பாடி. சிறையிலிருந்த கணைக்காலிரும்பொறையை விடுவித்தார் என்று கூறுகிறது. எனவே, கணைக்கால் இரும்பொறை இறக்கவில்லை என்பதும் அவன் விடுதலை யடைந்தான் என்பதும் தெரிகின்றன. இதனால் கணைக்கா லிரும்பொறை செங்கணானுக்குக் கீழடங்கி இருந்தான் என்பதும் செங்கணான் கொங்கு நாட்டின் அரசனானான் என்பதும் தெரிகின்றன. சோழன் செங்கணானும் கணைக்கால் இரும்பொறையும் ஏறத்தாழக் கி. பி. 200 க்கும் 250க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்தவ ராகலாம்.


  1. * போர் அல்லது போஒர் என்பது சோழநாட்டுக் காவிரிக் கரைமேல் இருந்த ஓர் ஊர். அவ்வூரிலிருந்த பழையன் என்பவன் சோழரின் சேனைத் தலைவன். (அகம் 186: 15-16; 326:9-12, நற். 10:7-8) போர் என்னும் ஊரில் வேறு சில போர்களும் நடந்திருக்கின்றன. (புறம். 62, 63, 368 இவற்றின் அடிக்குறிப்பு காண்க.)