பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

என்றும் எழுதுகிறார்,[1] இவர் கூறுவது இவருடைய ஊகமும் கற்பனையும் ஆகும். பல்லவ சிம்மவிஷ்ணு சோழ நாட்டை வென்றான் என்று பல்லவரின் பள்ளன் கோவில் செப்பேடு கூறுகிறது. (சுலோகம் 5) சிம்ம விஷ்ணு இன்னொரு சிம்ம விஷ்ணு என்பவனே வென்றான் என்று அதே சாசனம் (சுலோகம் 4) கூறுகிறது. இதிலிருந்து சோழநாட்டையரசாண்ட சிம்மவிஷ்ணுவைத் தொண்டை நாட்டையரசாண்ட பல்லவ சிம்மவிஷ்ணு வென்று சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. ஆனால், மகாலிங்கம், பல்லவ சிம்மவிஷ்ணு சோழன் செங்கணானுடன் போர் செய்து சோழநாட்டை வென்றான் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? சாசனம் கூறுகிற பெயரை மாற்றி இவர் தம் மனம் போனபடி கூறுவது ஏற்கத்தக்கதன்று.

கி. பி. 6-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டையரசாண்டவர் களப்பிர அரசர்கள். களப்பிரருக்கு கீழ்ச் சோழ அரசர் அக்காலத்தில் சிற்றரசராக இருந்தார்கள். ஆகவே, சுதந்தரமும் ஆற்றலும் படைத்திருந்த செங்கட் சோழன் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்குக் கீழடங்கிச் சிற்றரசனாக வாழ்ந்திருக்க முடியாது. அவன், களப்பிரர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு சோழர்கள் சுதந்தரர்களாக ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில்தான் வாழ்ந்திருக்க வேண்டும். கடைச்சங்க காலத்துக்குப் பிறகு (கி.பி. 250க் குப் பிறகு) சோழநாடு களப்பிரர் ஆட்சிக்குக் கீழடங்கியிருந்தது. ஏறத்தாழ கி. பி. 575 ல் பல்லவ சிம்மவிஷ்ணு சோழ நாட்டைக் களப்பிரிடமிருந்து வென்று கைப்பற்றினான். பிறகு சோழநாடு கி. பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவ ஆட்சிக்குட் பட்டிருந்தது. கி. பி. 10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சோழர்கள் மறுபடியும் சுதந்திரம் பெற்றுப் பேரரசர்களாக அரசாண்டார்கள்.


  1. (P. 58-59 K. E. S. I. H.)