பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

ஆகவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் சோழர்கள் களப்பிரருக்கும் பின்னர் பல்லவருக்கும் கீழடங்கிச் சிற்றரசர்களாக இருந்த காலத்தில் சோழன் செங்கணான் இருந்திருக்க முடியாது. செங்கணான், களப்பிரர் சோழநாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்னரே கி.பி. 250 க்கு முன்பு இருந்தவனாதல் வேண்டும்.

பள்ளன் கோவில் செப்பேடு கூறுகிறபடி, பல்லவ சிம்மவிஷ்ணு வென்ற சோழ நாட்டுச் சிம்மவிஷ்ணு களப்பிர அரசன் என்று சரித்திர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ள உண்மையாகும். சரித்திரக்காரர்களின் இந்த முடிவுடன் மகாலிங்கம் புதிதாகக் கற்பனையாகவும் ஊகமாகவும் கூறுகிற செய்தி முரண்படுகிறது.

பொய்கையாரைப் பொய்கையாழ்வாருடன் இணைத்துக் குழப்புவதும், பிறகு பொய்கையார் களவழியில் பாடிய செங்கணானைக் கி. பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று இணைத்துக் குழப்புவதும் பிறகு அந்தச் செங்கணானைப் பல்லவ சிம்மவிஷ்ணுவின் சமகாலத்தவன் என்று ஊகிப்பதும், பிறகு செங்கணானைச் சோழ நாட்டில் அரசாண்ட சிம்மவிஷ்ணுவுடன் (களப்பிர அரசனுடன்) இணைத்துக் குழப்புவதும் உண்மையான சரித்திரத்துக்கு உகந்ததன்று. முதற்கோணல் முற்றுங்கோணல் என்னும் பழமொழிபோல, பொய்கையாழ்வாரில் தொடங்கிய தவறு பல தவறுகளில் வந்து முடிந்தது.

எனவே, நாம் தொடக்கத்தில் கூறியதுபோல, சோழன் செங்கணானும் அவன் வென்ற கணைக்கால் இரும்பொறையும் அவர்கள் காலத்திலிருந்த பொய்கையாரும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தார்கள் என்பதே சரியாகும்.