பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பொறை யரசர்களின்
கால நிர்ணயம்

இனி, கொங்கு நாட்டைக் கடைச் சங்க காலத்தில் அரசாண்ட சேரமன்னர்களின் காலத்தை நிர்ணயிக்க வேண்டியது கடமையாகும். (காலத்தைக் கூறாத சரித்திரம் சரித்திரம் ஆகாது.) இந்த அரசர்களில் மூன்றுபேர் (7, 8, 9 ஆம் பத்து) ஒவ்வொருவரும் இத்தனையாண்டு அரசாண்டனர் என்பதைப் பதிற்றுப் பத்துப் பதிகக் குறிப்புகள் கூறுகின்றன. 7-ஆம் பத்தின் தலைவனான செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டும், இவன் மகன் 8-ஆம் பத்துத் தலைவனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17-ஆண்டும், இவனுடைய தம்பி மகன் 9-ஆம் பத்துத் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறை 16-ஆண்டும் அரசாண்டனர் என்று அந்தக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால், இவர்களுக்கு முன்னும் பின்னும் அரசாண்டவர் ஒவ்வொருவரும் எத்தனையாண்டு அரசாண்டனர் என்பது தெரியவில்லை. கிடைத்துள்ள குறிப்புகளைக் கொண்டு இவர்களின் காலத்தை ஒருவாறு நிர்ணயிக்கலாம்.

இந்தக் கால நிர்ணயத்திற்கு அடிப்படையான கருவியாக இருப்பது செங்குட்டுவன்-கஜபாகு சமகாலம் ஆகும். செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்து விழா செய்தபோது, அவ்விழாவுக்கு வந்திருந்த அரசர்களில் இலங்கை யரசனான கஜபாகுவும் (முதலாம்