பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பொறை யரசரின்
ஆட்சி முறை

தமிழ்நாட்டில் மட்டுமன்று, பாரத நாடு முழுவதிலும் அந்தப் பழங்காலத்தில் அரசர்கள் ஆட்சி செய்வதற்குத் துணையாக ஐம்பெருங் குழுவினர் இருந்தார்கள். ஐம்பெருங் குழு என்பது அமைச்சர், புரோகிதர், சேனைத் தலைவர்; தூதுவர், சாரணர் என்பவர்கள். ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர் சிலர் இருந்தார்கள். புரோகிதர் என்பவர் மதச்சார்பான காரியங்களைக் கவனித்தனர், அக்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்று நான்கு வகையான சேனைகள் அரசர்களுக்கு இருந்தன, கொங்கு நாட்டு அரசருக்குச் சிறப்பாக யானைப்படை இருந்தது. ஒவ்வொரு படைக்கும் ஒவ்வொரு தலைவனும், அவர்களுக்குத் தலைவனாக சேனாபதியும் இருந்தனர். தூதுவர்கள் அரசன் கட்டளைப்படி அரச காரியங்களை வேற்றரசரிடஞ் சென்று காரியங்களை முடித்தார்கள். ஒற்றர்கள் மாறுவேடம் பூண்டு உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் அரசியல் இரகசியங்களைத் தெரிந்து வந்து அரசனுக்குக் கூறினார்கள். தமிழ்நாட்டு அரசர்களிடத்திலும் இவ்வாறு ஐம்பெருங்குழுக்கள் இருந்து அரசாட்சி செய்தனர். கொங்கு நாட்டிலும் ஐம்பெருங் குழுவைக் கொண்டு அரசாட்சி நடந்தது. ஆனால் கொங்கு நாட்டு ஐம்பெருங்குழுவைப் பற்றி அதிகமாகத் தெரியவில்லை.