பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155


தனர் என்பது தெரிகின்றது. இந்தப் பிராமி கல்வெட்டெ ழுத்துகளைப் பற்றி இந்நூலில் வேறு இடத்தில் காண்க.

கரூர் தாலுகாவைச் சேர்ந்த புகழூருக்கு 2 கல் தூரத்தில் ஆறுநாட்டார்மலை என்னும் மலையில் கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட பிராமி எழுத்துகள் உள்ளன. இவ்வெழுத்துகள் இக்குன்றில் பௌத்த அல்லது ஜைன மதத் துறவிகள் அக் காலத்தில் தங்கியிருந்து தவஞ் செய்ததைக் குறிக்கின்றன.

ஆறு நாட்டர் மலைக்கு ஏழு கல்லுக்கப்பால் உள்ள அர்த்தநாரி பாளையம் என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூரின் பழைய பெயர் தெரியவில்லை. இவ்வூர் வயல்களின் மத்தியில் கற்பாறைக் குன்றும் அதில் நீர் உள்ள சுனையும் இருக் கின்றன. இங்குள்ள பொடவில் ஐந்து கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குக் கடைச் சங்க காலத்தில் சயண அல்லது பௌத்த சமயத் துறவிகள் தங்கியிருந்தனர் என்பதை இக்கற்படுக்கைகள் சான்று கூறுகின்றன. இக் குன்று இக்காலத்தில் பஞ்ச பாண்டவ மலை என்றும் இங்குள்ள சுனை ஐவர்சுனை என்றும் பெயர் பெற்றுள்ளன.

கோயம்புத்தூர் மாவட்டம் ஈரோடு தாலுக்காவில் ஈரோடுக்குப் போகிற சாலையில் உள்ளது அரசலூர் மலை. இம்மலையில் ஓரிடத்தில் இயற்கையாக அமைந்த குகையில் சில கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டும் உள்ளன. இவை, கடைச் சங்க காலத்தில் இங்கு சமண முனிவர்கள் இருந்ததைத் தெரிவிக்கின்றன.[1]


  1. *(Annual Report on South Indian Epigrapby. 1927-28. Part II Para I).
      • (சுதேசமித்திரன் 1961, ஜூன் 4 தேதி, Annual Report on S.I. Epigraphy, 1961-62. P. 10).