பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159


மணமானவர்கள் எல்லோரும் சங்கு வளைகளை அணிந்திருந் தார்கள். இதைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். தமிழ்நாட்டு மகளிர் மட்டுமல்லர், ஏனைய பாரததாட்டு மகளிர் எல்லோரும் அந்தக் காலத்தில் சங்கு வளைகளை அணிந்தனர். இந்த வழக்கம் மிகப் பிற்காலத்தில் மறைந்துபோய், கண்ணாடி வளையல் அணியும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. பாரத நாட்டில் முஸ்லிம்கள் தொடர்பு ஏற்பட்ட பிறகு இந்த மாறுதல் உண்டா யிற்று. இப்போதுங்கூட வட நாடுகளில் சில இடங்களில் மகளிர் சங்கு வளைகளை அணிந்து வருகின்றனர், கொங்கு நாட்டு மகளிரும் அந்தக் காலத்தில் சங்கு வளைகளை அணிந் தனர். சங்கு வளைகள் கடற்கரை நாடுகளிலிருந்து கொங்கு நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. பெண்களுக்கு ஆடை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமாகச் சங்கு வளை களும் இருந்தன. ஆகையால் சங்கு வளை வாணிகம் அக்காலத்தில் பெரிதாக இருந்தது.[1]


கொங்கு நாட்டில் பெரும்பாலும் மலைகள் உள்ள குறிஞ்சி நிலங்களும், காடுகள் உள்ள முல்லை நிலங்களும் இருந்தன. நீர்வளம் நிலவளம் பொருந்தின மருத நிலங்களும் இருந்தன. குறிஞ்சி நிலங்களில் வாழ்ந்த மக்கள் மலைகளிலும் மலைச்சாரல் களிலும் தினை அரிசியையும் ஐவன நெல் என்னும் மலை நெல்லையும் பயிரிட்டார்கள். மலைகளில் வளர்ந்த மூங்கிலி லிருந்து மூங்கில் அரிசியும் சிறிதளவு கிடைத்தது. மூங்கி லரிசியைச் சமைத்து உண்டனர். அதை அவலாக இடித்தும் உண்டனர். மலைகளில் மலைத்தேன் கிடைத்தது. மலேச் சாரல்களில் பலா மரங்கள் இருந்தன. அகில், சந்தனம், வேங்கை முதலிய மரங்களும் இருந்தன,


  1. பொலி வினையுடைய சங்கவளை, துர்க்கை கோயில் வாயிலே தன் கை வளையைத் தகர்த்து' என்று பழைய அரும்பத வுரையாசிரியர் எழுதுவது காண்க.