பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163

லிருந்து, சாவகநாடு எனப்பட்ட கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து கிடைத்த சாதிக்காய், இலவங்கம், கர்ப்பூரம் முதலிய வாசனைப் பொருள்களையும் பட்டுத் துணிகளையும் யவனர் வாங்கிக் கொண்டு போனார்கள். உள் நாடாகிய கொங்கு நாட்டிலிருந்து அக்காலத்தில் உலகப் புகழ் பெற்றிருந்த நீலமணிக் கற்களை யவனர் வாங்கிக்கொண்டு போனார்கள். யானைத் தந்தங்களையும் யவனர் வாங்கிக்கொண்டு போனார்கள். கொங்கு நாட்டிலிருந்தும் யானைத் தந்தங்கள் அனுப்பப்பட்டன. கொல்லிமலையில் இருந்தவர் யானைக் கொம்புகளை விற்றார்கள்.[1]

கொங்கு நாட்டு நீலமணிக் கற்களை யவனர் வாங்கிக் கொண்டு போனதைப் பற்றிக் கூறுவதற்கு முன்பு, யவனர் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்ட வரலாற்றை யறிந்துகொள்வது முக்கியமாகும். கிரேக்க நாட்டாரும் உரோம நாட்டாருமாகிய யவனர்கள் வருவதற்கு முன்னே, அதாவது கிருஸ்து சகாப்தத்துக்கு முன்னே, அரபிநாட்டு அராபியர் தமிழ் நாட்டுடனும் வடஇந்திய நாட்டுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் முக்கிய மாக இந்திய தேசத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்களுக்குத் தங்களுடைய சிறிய படகுகளில் வந்து வாணிகஞ் செய்தார்கள்.

அந்தக் காலத்தில் தெரித்திருந்த உலகம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்கள் மட்டுமே. ஆபிரிக்கா கண்டத்தில் எகிப்து தேசமும் சில கிழக்குப் பகுதி நாடுகளும் தெரிந்திருந்தன; ஆபிரிக்காவின் தெற்கு மேற்குப் பகுதி நாடுகள் உலகம் அறியாத இருண்ட கண்டமாகவே இருந்து வந்தன. அந்தக் காலத்தில்


  1. * (‘காந்தளஞ் சிறுகுடி பசித்தெனக், கடுங்கண் வேழத்துக் கோடு நொடுத் துண்ணும், வல்வில் ஓரிக் கொல்லிக் குடவரை.’ (குறும்-100 : 3-5)