பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

உட்பட எகிப்து தேசமும் மேற்கு ஆசியாவில் சில நாடுகளும் உரோம சாம்ராச்சியத்தின் கீழடங்கின. அரபு நாட்டின் மேற்குக் கரையில் இருந்த (செங்கடலின் கிழக்குக் கரையிலிருந்த) அரபுத் துறைமுகங்களை இந்தச் சக்கரவர்த்தித் தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தான். பிறகு யவனக் கப்பல்கள் இந்திய தேசத்தின் மேற்குக் கடற்கரைப் பட்டினங்களுக்கு நேரடியாக வந்து வாணிகஞ் செய்யத் தலைப்பட்டன. இவ்வாறு கிரேக்க உரோமர்களின் வாணிகத் தொடர்பு கி. பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது. அப்பொழுது யவனக் கப்பல்கள் நடுக்கடலின் வழியாக வராமல் கடற்கரையின் ஓரமாகவே பிரயாணஞ் செய்தன. கரையோரமாக வருவதனால் மாதக் கணக்கில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் , ஏறத்தாழ கி.பி. 47-இல் ஹிப்பலஸ் என்னும் கிரேக்க மாலுமி, பருவக்காற்றின் உதவியினால் நடுக் கடலின் ஊடே கப்பலைச் செலுத்தி விரைவாக முசிறித் துறை முகத்துக்கு வந்தான். அந்தப் பருவக்காற்றுக்கு யவன மாலுமிகள், அதைக் கண்டுபிடித்தவன் பெயரையே வைத்து ஹிப்பலஸ் என்று பெயர் சூட்டினார்கள். இதன் பிறகு யவனக் கப்பல்கள் அரபிக் கடலின் ஊடே முசிறி முதலிய துறைமுகங்களுக்கு விரைவாக வந்து போயின. இதனால் அவர்களுக்கு நாற்பது நாட்கள் மிச்சமாயின.

தொடக்கக் காலத்தில் யவனர் செங்கடலுக்கு வந்து வாணிகஞ் செய்தபோது அந்தக் கடலுக்கு எரித்ரைக் கடல் என்று பெயர் கூறினார்கள். எரித்ரைக் கடல் என்றால் செங்கடல் என்பது பொருள். பிறகு, அவர்கள் செங்கடலுக்கு இப்பால் பாரசீகக் குடாக்கடலுக்கு வந்தபோது இந்தக் கடலுக்கும் எரித்ரைக் கடல் என்று அதே பெயரிட்டார்கள். பிறகு, அரபிக் கடலில் வந்து வாணிகஞ் செய்தபோது அரபிக் கடலுக்கும் அப்பெயரையே சூட்டினார்கள். பின்னர் இந்து சமுத்திரம் வங்காளக்குடாக் கடல்களில் வந்து வாணிகஞ் செய்தபோது இந்தக் கடல்களுக்கும் எரிதரைக் கடல் என்றே