பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

வாணிகர்கள் கொங்கு நாட்டுக்கு வந்தது, முக்கியமாக இந்தக் கதிர்மணிகளை வாங்குவதற்காகவே. யவனர்கள் கொங்கு நாட்டுக்கு வந்து பொற் காசுகளையும் வெள்ளிக் காசுகளையும் கொடுத்து நீலக்கற்களை வாங்கிக் கொண்டு போனதற்கு இன்னொரு சான்று, அவர்களுடைய பழைய நாணயங்கள் கொங்கு நாட்டில் சமீபகாலத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதுதான். கொங்கு நாட்டைச் சேர்ந்த பொள்ளாச்சி, வெள்ளலூர், கரூர் முதலிய ஊர்களில் பழைய காலத்து உரோம நாணயங்கள் பெருவாரியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சேரநாடு பாண்டி நாடு புதுக்கோட்டை முதலிய இடங்களிலும் பழங்காலத்து உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு நம்முடைய ஆராய்ச்சிக்குரிய கொங்கு நாட்டில் கிடைத்த உரோம சாம்ராச்சியப் பழங் காசுகளை மட்டுங் கூறுவோம்.

பொள்ளாச்சி

(கோயம்புத்தூர் மாவட்டம்.) இங்கு ஒரு பானை நிறைய உரோமாபுரி வெள்ளிக்காசுகள் 1800-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன. 1809-ஆம் ஆண்டிலும் ஒரு புதையல் கண்டெடுக்கப்பட்டது. இந்தப் புதையலில் கிடைத்த காசுகள் பொற்காசுகளா, வெள்ளிக் காசுகளா என்பது தெரியவில்லை. 1888-ஆம் ஆண்டிலும் உரோமாபுரிக் காசுப் புதையல் கண்டெடுக்கப்பட்டது.

வெள்ளலூர்

(கோயம்புத்தூருக்கு அருகில் போத்தனூருக்குச் சமீபம்) இவ்வூரிலும் உரோம தேசத்துப் பழங்காலக் காசுப் புதையல்கள் கிடைத்தன. 1842-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட புதையலில் 378 வெள்ளிக் காசுகளும் 1850-ஆம் ஆண்டில் கிடைத்த புதையலில் 135 வெள்ளிக் காசுகளும் 1891-ஆம் ஆண்டில் கிடைத்த புதையலில் 180 வெள்ளிக்