பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181

பாடினார். (புறம்-148). இதே காரணம் பற்றி வையாவிக் கோப் பெரும்பேகனைக் கபிலரும் (புறம்-143), பரணரும் (புறம் 141, 142, 144, 145) பெருங்குன்றூர்க் கிழாரும் (புறம்-147) பாடியுள்ளனர். இதனால், இப்புலவர்கள் காலத்தில் அரிசில்கிழாரும் இருந்தார் என்பது தெரிகின்றது. இவர் பாடிய புறப்பொருட்டுறைப் பற்றிய செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன. (புறம்-281, 285, 300, 3114, 342)

பெருஞ்சேரல் இரும்பொறை, அதிகமான் நெடுமானஞ்சியின் தகடூரின் மேல் படையெடுத்துச் சென்று முற்றுகையிட்டுப் போர் செய்தபோது அரிசில் கிழார். போர்க்களத்தில் இருந்து அந்தப் போர் நிகழ்ச்சியை நேரில் கண்டார். பொன்முடியாரும் அப்போர் நிகழ்ச்சிகளை நேரில் கண்டவர், தகடூர்ப் போரைப் பற்றி தகடூர் யாத்திரை என்னும் ஒரு - நூல் இருந்தது. அந்த நூலில் இப்புலவர்கள் பாடிய செய்யுட்களும் இருந்தன. அந்த நூல் இப்போது மறைந்துவிட்டது. சில செய்யுட்கள் மட்டும் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தகடூர் மன்னனாக அதிகமான் நெடுமானஞ்சியின் அவைப் புலவரான ஔவையாரும் இவர்கள் காலத்திலிருந்தார். அதிகமான் நெடுமானஞ்சியின் மகனான எழினி, தகடூர்ப் போர்க்களத்தில் வீரப்போர் செய்து இறந்த போது அரசில்கிழார் அவனுடைய வீரத்தைப் புகழ்ந்து பாடினார் (புறம்-230).

தகடூர் யாத்திரையில் அரசில்கிழாருடைய செய்யுள்களும் இருந்தன என்று கூறினோம். தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியலின் உரையில், உரையாசிரியர் நச்சினார்க்கினியர், தகடூர் யாத்திரையிலிருந்து அரிசில்கிழாரின் செய்யுட்கள் சிலவற்றை மேற்கோள் காட்டுகிறார். புறத்திணையியல் ‘இயங்குபடையரவம்’ எனத் தொடங்கும் 8-ஆம் சூத்திரத்தின் “பொருளின்று உயர்ந்த பேராண் பக்கம்”