பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

என்பதன் உரையில் “மெய்ம்மலி மனத்தினம்மெதிர் நின்றோன்” என்னும் செய்யுளை மேற்கோள் காட்டி “இஃது அதிகமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேர மான் (பெருஞ்சேரலிரும் பொறை) முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது” என்று எழுதுகிறார்.

புறத்திணையில் ‘கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்’ என்று தொடங்கும் 12-ஆம் சூத்திரத்தில் ‘அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்’ என்பதன் உரையில் நச்சினார்க் தினியர் ‘கலையெனப் பாய்ந்த மாவும்’ என்னுஞ் செய்யுளை மேற்கோள் காட்டி, “இது சேரமான் பெருஞ்சேர லிரும்பொறை) பொன்முடியாரையும் அரிசில்கிழாரையும் நோக்கித் தன்படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது” என்று விளக்கங் கூறியுள்ளார்.

தகடூர்ப் போரை வென்ற பெருஞ்சேர லிரும்பொறைமேல் அரிசில்கிழார் பத்துச் செய்யுட்களைப் பாடினார். (பதிற்றுப் பத்து, எட்டாம்பத்து) அச்செய்யுள்களில் அவ்வரசனுடைய வெற்றிகளையும் நல்லியல்புகளையும் கூறியுள்ளார். அவற்றைக் கேட்டு மகிழ்ந்த அவ்வரசன் அவருக்கு ஒன்பது லட்சம் பொன்னையும், தன்னுடைய அரண்மனையையும் தன்னுடைய சிம்மாசனத்தையும் அவருக்குப் பரிசிலாகக் கொடுத்தான், புலவர் அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் அரசனுக்கு அமைச்சராக இருந்தார். இவைகளை எட்டாம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்பினால் அறிகிறோம். அக்குறிப்பாவது :

“பாடிப் பெற்ற பரிசில் தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒன்பது நூறாயிரத்தொடு அரசுகட்டிற் கொடுப்ப அவர் யான்