பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185

ஔவையாருக்குக் கொடுத்து உண்ணச் செய்தான். உண்ட பிறகுதான் அக்கனியின் சிறப்பை ஔவையார் அறிந்தார். அப்போது, அதிகமானுடைய தன்னலமற்ற பெருங்குணத்தை வியந்து வாழ்த்தினார். (புறம். 91) நெடுமான் அஞ்சியை ஔவையார் வேறு சில பாடல்களிலும் பாடியுள்ளார். அவை புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன. (புறம், 87, 88, 89, 90, 91, 94, 97, 98, 101, 103, 104, 315, 320).

நெடுமானஞ்சியின் மகனான பொகுட்டெழினியையும் ஒளவையார் பாடியுள்ளார், அவன் அக்காலத்து வழக்கப்படிப் பகைவருடைய நாட்டில் சென்று ஆனிரைகளைக் கவர்ந்து வந்ததைப் பாடியுள்ளார். (குறும். 80 : 4-6) அவனுடைய வீரத்தையும் நல்லாட்சியையும் பாடி இருக்கிறார். (புறம். 102), அவன் பகைவருடைய கோட்டையொன்றை வென்ற போது ஔவையாருக்குப் புத்தாடை கொடுத்து விருந்து செய்தான். (புறம். 392) ஔவையார் காலத்தில் பாரி வள்ளல் இருந்தான். மூவேந்தர் பாரியின் பரம்பு மலைக்கோட்டையை முற்றுகையிட்டிருந்தபோது கிளிகளைப் பழக்கிக் கோட்டைக்கு வெளியேயிருந்த நெற்கதிர்களைக் கொண்டுவந்த செய்தியை ஔவையார் கூறுகிறார். (அகம். 303 : 10-14)


ஔவையார் காலத்தில் தகடூர்ப் போர் நிகழ்ந்தது. கொங்கு நாட்டில் தங்கள் இராச்சியத்தை நிறுவிய இரும்பொறை யரசர்கள் தங்கள் இராச்சியத்தை விரிவு படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரின் மேல் படையெடுத்து வந்து, கோட்டையை முற்றுகையிட்டுப் போர் செய்தான். அந்தப் போரில் இருதரப்பிலும் பல வீரர்கள் மாண்டார்கள். அதிகமான் நெடுமான் அஞ்சியின் மார்பில் அம்பினால் புண் உண்டாயிற்று. அப்போது ஔவையார் அவனைப் பாடினார். (புறம். 93) பிறகு அப்புண் காரணமாக அவன் இறந்து

கொ-12