பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

போனான். அப்போதும் அவனை ஒளவையார் பாடினார். (புறம். 236, 231) அவனுக்கு நடுகல் நட்டு நினைவுக்குறியமைத்தார்கள். அச்சமயத்திலும் ஒளவையார் ஒரு செய்யுளைப் பாடினார். (புறம். 232)

ஒளவையார், அதிகமான் நெடுமான் அஞ்சியாலும் அவன் மகன் பொகுட்டெழினியாலும் ஆதரிக்கப்பட்டவர். தகடூரில் அதிகமானுடன் போர் சேய்த பெருஞ்சேரல் இரும்பொறையையும் அவனுடைய தாயாதி தமயனான சேரன் செங்குட்டுவனையும் அரிசில் கிழாரும் பரணரும் பாடியிருக்கிறார்கள். ஔவையாரின் காலத்திலிருந்த பாரியைக் கபிலர் பாடியுள்ளார். ஆகவே இவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் ஔவையாரும் வாழ்ந்தார் என்பது தெரிகின்றது. பாரியைப் பாடின கபிலர், செங்குட்டுவனின் தாயாதிச் சிற்றப்பனான செல்வக்கடுங்கோ வாழியாதன்மீது 7-ஆம் பத்துப் பாடினார். செங்குட்டுவனும் செல்வக்கடுங்கோ வாழியாதனும் ஏறத்தாழ சமகாலத்தில் இருந்தவர். மேலும் கபிலரும் பரணரும் சம காலத்தில் இருந்தவர் என்பது தெரிந்த விஷயம். ஆகவே, இவர்கள் எல்லோரும் சமகாலத்தவர் என்பது தெரிகின்றது. மேலும் செங்குட்டுவனுக்குத் தம்பியாகிய இளங்கோவடிகளும் இவர்களின் நண்பராகிய சீத்தலைச் சாத்தனாரும் ஔவையார் காலத்தில் இருந்தவர்கள்.

ஒளவையாரின் செய்யுட்கள் தொகை நூல்களில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய செய்யுள்கள் அகநானூற்றில் நான்கும், குறுந்தொகையில் பதினைந்தும், நற்றிணையில் ஏழும், புறநானூற்றில் முப்பத்து மூன்றும் ஆக மொத்தம் ஐம்பத்தொன்பது செய்யுட்கள் கிடைத்திருக்கின்றன. இவருடைய செய்யுட்களில் சரித்திர ஆராய்ச்சிக்குப் பயன்படுகிற செய்திகள் காணப்படுகின்றன.