பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187

அதிகமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்களில் ஒருவன் கரும்பைக் கொண்டு வந்து தமிழகத்தில் முதல் முதலாகப் பயிர் செய்தான் என்று ஔவையார் கூறுகிறார். (புறம். 99, 392).

கருவூர்க் கண்ணம் பாளனார்

இவர் கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்தவர். இவருடைய செய்யுட்கள் அகநானூற்றிலும் (180, 263) நற்றிணையிலும் (148) தொகுக்கப்பட்டுள்ளன. அகம்.263ல்

“ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சியன்ன வளநகர் விளங்க”

என்று இவர் கூறுகிறார். இதில் கோதை என்பது தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் குறிப்பதாகலாம். பெருஞ்சேரலிரும்பொறைக்குக் “கோதை” என்று ஒரு சிறப்பு பெயர் உண்டு. வஞ்சி என்பது கருவூரின் இன்னொரு பெயர்.

கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்

கொங்கு நாட்டுக் கருவூரில் இருந்த இவர் அகம் 309 நற். 343, புறம் 168 ஆகிய மூன்று செய்யுட்களைப் பாடியிருக்கிறார். கதப்பிள்ளையார் என்னும் இன்னொரு புலவர் குறுந்தொகை (64, 265, 380) நற்றிணை (135) புறம் (380) ஆகிய செய்யுட்களைப் பாடியுள்ளார். இவ்விருவரையும் ஒருவர் என்று பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் கருதுகிறார். இவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்று தோன்றுகின்றனர்.

கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் புறம் 168-ல் குதிரை மலைப் பிட்டங் கொற்றனைப் பாடுகிறார். பிட்டங்கொற்றன் கொங்கு நாட்டில் குதிரைமலை நாட்டில் இருந்தவன். இவன் கொங்குச் சேரரின் கீழ் சேனைத் தலைவனாக இருந்தான்.