பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200


கொங்கு நாட்டுச் சங்க நூல்கள்

பதிற்றுப் பத்து

கடைச்சங்க காலத்து நூல்களில் பதிற்றுப்பத்தும் ஒன்று. இதில் சேர நாட்டுச் சேர அரசர்கள் அறுவரும் கொங்கு நாட்டுச் சேர அரசர் நால்வரும் பாடப்பட்டுள்ளனர். ஆகையால் இந்நூலின் பிற்பகுதி கொங்கு நாட்டுப் பொறையரைப் பற்றியது.

இவற்றில் ஏழாம் பத்து, கொங்கு நாட்டை யரசாண்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் மேல் கபிலர் பாடியது இதற்குக் கபிலர் நூறாயிரம் (ஒரு லட்சம்) காணம் பரிசாகப் பெற்றார். மற்றும், கொங்கு நாட்டிலுள்ள நன்றா (இப்போது திருநணா?) என்னும் மலை மேலிருந்து கண்ணுக்குத் தெரிந்த நாடுகளின் வருவாயை இவ்வரசன் கபிலருக்குக் கொடுத்தான் என்று 7 ஆம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்புக் கூறுகிறது.

பதிற்றுப் பத்தின் எட்டாம் பத்து. தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை மேல் அரிசில்கிழார் பாடியது. இதற்காக இவர் பெற்ற பரிசு ஒன்பது நூறாயிரம் (ஒன்பது இலட்சம்) காணமும் அமைச்சுப் பதவியுமாம். தகடூர்ப் போர் நடந்த போது அரிசில் கிழார் போர்களத்தில் இருந்து அப்போரை நேரில் கண்டவர். அக்காலத்தில் இவர் பாடிய செய்யுட்கள் தகடூர் யாத்திரை என்னும் நூலில் தொகுக்கப்பட்டிருந்தன.