பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தொடர்ச்சி) மலைகள். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கே சேரநாடும் துளுநாடும் இருந்தன. கொங்கு நாட்டின் கிழக்கு எல்லைக்கப்பால் சோழநாடும் தொண்டை நாடும் இருந்தன. அதன் வடக்கு எல்லை, மைசூரில் பாய்கிற காவிரியாறு (சீரங்கப்பட்டணம்) வரையில் இருந்தது. இவ்வாறு பழங்கொங்கு நாட்டின் பரப்பும் எல்லையும் மிகப் பெரிதாக இருந்தன.

இப்போது பாண்டி நாட்டுடன் இணைந்து இருக்கிற (மதுரை மாவட்டம் மதுரை வட்டாரத்தில் சேர்ந்திருக்கிற) வையாவி நாடு (பழனிமலை வட்டாரம்) அக் காலத்தில் கொங்கு நாட்டின் தென்பகுதியாக இருந்தது. பழனிமலை சங்க காலத்தில் பொதினி என்று வழங்கப் பெற்றது. பொதினி பிற்காலத்தில் பழனியாயிற்று. கொங்கு நாட்டின் தென் கோடியாகிய வையாவி நாட்டை அக் காலத்தில் வையாவிக்கோ என்னும் அரச பரம்பரையார் அரசாண்டார்கள். சேரநாடு துளுநாடுகளின் கிழக்கே, வடக்குத் தெற்காக நீண்டு கிடக்கிற சைய மலைகள் (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) கொங்கு நாட்டின் மேற்கு எல்லைகளாக அமைந்திருந்தன. யானை மலைப் பிரதேசம் கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தது. அது அக்காலத்தில் உம்பற்காடு என்று பெயர் பெற்றிருந்தது. (உம்பல்-யானை), மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாலைக்காட்டு கணவாய், சேர நாட்டையும் கொங்கு நாட்டையும் இணைத்துப் போக்குவரத்துக்கு உதவியாக இருந்தது. மற்ற இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயரமாக அமைந்து இரண்டு நாடுகளுக்கும் போக்குவரத்து இல்லாதபடி தடுத்து விட்டன. பாலைக்காட்டுக்கு அருகில் மலைகள் தாழ்ந்து கணவாயாக அமைந்து இருப்பதால் அது சேர நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்கும் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கின்றது. இந்தக் கணவாய் வழியாகச் சேர அரசர் படையெடுத்து வந்து கொங்கு நாட்டைக் கைப்பற்றினார்கள்.