பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205

“மருதம் ஓரம்போகி, நெய்தல் அம்மூவன்,
கருதுங் குறிஞ்சி கபிலன்,-கருதிய
பாலை ஓதலாந்தை, பனிமுல்லை பேயனே,
நூலையோ தைங்குறு நூறு.”

என்னும் பழைய செய்யுளால் இதனையறிலாம்.

இந்த நூலைத் தொகுப்பித்தவர், கொங்கு நாட்டை யரசாண்ட யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. தொகுத்தவர், இவ்வரசனால் ஆதரிக்கப் பெற்றவராகிய புலத் துறை முற்றிய கூடலூர் கிழார். புலவர் கூடலூர்கிழார், இவ்வரசன் இறந்த பிறகும் வாழ்ந்திருந்தார். இவ்வரசன் இறந்த போது இவன்மேல் கையறு நிலை பாடினார் (புறம் 229). அச்செய்யுளின் அடிக்குறிப்பு, “கோச் சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சு மென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துப் பாடியது" என்று கூறுகிறது.

ஐங்குறு நூறுக்குப் பிற்காலத்திலே கடவுள் வாழ்த்துப் பாடியவர், பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்தப் பெருந் தேவனாரே ஏனைய தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடினார். ஐங்குறு நூற்றுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அந்த உரையாசிரியரின் பெயர் தெரியவில்லை.

இந்நூல் 1903 ஆண்டில் முதல் முதலாக அச்சுப் புத்தகமாக வெளிவந்தது. இதன் பதிப்பாசிரியர் உத்தமதான புரம் வே. சாமிநாதையர் அவர்கள். திருவாவடுதுறை ஆதீனத்தாரும் திருமயிலை மகாவித்துவான் சண்முகம்பிள்ளையவர்களும் ஜே. எம். வேலுப்பிள்ளையவர்களும் ஆழ்வார் திருநகரி தே. இலக்குமணக் கவிராயர் அவர்களும் தங்களுடைய கையெழுத்துப் பிரதிகளை கொடுத்து இந்நூலைப் பதிப்பிக்க உதவி செய்தனர்.