பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209

கொண்டு சிலர் சங்க காலத்தைக் கணக்கிடுகிறார்கள். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத தேசத்தை யரசாண்ட அசோக சக்கரவர்த்தி காலத்தில் வட இந்தியாவிலிருந்து பிராமி எழுத்தைப் பௌத்தப் பிக்குகள் தமிழகத்தில் கொண்டு வந்தார்கள் என்றும் இந்தப் பிராமி எழுத்து வந்த பிறகு இதைத் தமிழர் நூல் எழுதப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் அதற்கு முன்பு தமிழில் எழுத்து இல்லை என்றும் இப்போது ஒரு சிலர் கூறுகின்றனர். பிராமி எழுத்து தமிழ் நாட்டுக்கு வருவதற்கு முன்பு இங்கு எழுத்தே கிடையாது என்பது இவர்கள் கூற்று. இது தவறான கருத்து. பிராமி எழுத்து தமிழகத்துக்கு வருவதற்கு முன்பு ஏதோ ஒருவகை யான எழுத்து வழங்கி வந்தது. அந்த எழுத்தினால் சங்க நூல்கள் எழுதப்பட்டன.

பிராமி எழுத்தின் தோற்றத்தைப் பற்றி வெவ்வேறு அபிப்பிராயங்கள் கூறப்படுகின்றன. அசோக சக்கரவர்த்தி காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பிராமி எழுத்து இருந்து வந்தது ; ஆகவே, அசோகர் காலத்துக்கு முன்னமே தமிழ்நாட்டில் பிராமி எழுத்து வழங்கி வந்தது என்பது ஒரு கருத்து. பிராமி எழுத்து தென் இந்தியாவில் தோன்றி வளர்ந்து பிறகு வட இந்தியாவுக்குச் சென்றது என்பது இன்னொரு கருத்து, தமிழ்நாட்டில் பிராமி எழுத்து வருவதற்கு முன்பு ஏதோ ஒருவகையான எழுத்து இருந்து வந்தது ; பிராமி எழுத்து தமிழ்நாட்டுக்கு வந்து வேரூன்றிய பிறகு பழைய தமிழ் எழுத்து பையப் பைய மறைந்து விட்டது என்பது வேறொரு கருத்து.

பிராமி எழுத்துக்கு முன்பு தமிழில் வேறு எழுத்து இல்லை என்பதற்குச் சான்று இல்லை. பிராமி எழுத்துக்கு முன்பு ஏதோ ஒருவகையான தமிழ் எழுத்து வழுங்கியிருக்க வேண்டும். வேறுவகையான எழுத்து இருந்ததா இல்லையா