பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

புலிகடிமால் அரச பரம்பரையார் என்று தோன்றுகின்றனர். ஹொய்சள என்பது புலிகடிமால் என்பதன் மொழிப்பெயர்ப்பாகத் தெரிகின்றது.

கொங்கு நாட்டின் வடஎல்லை பழங் காலத்தில் கி. பி. 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மைசூர் நாட்டில் பாய்கிற காவிரி ஆற்றுக்கு அப்பால் இருந்தது என்று கூறுவது வெறும் கற்பனையன்று, சரித்திர உண்மையே. அக்காலத்தில் கன்னட நாடு (வடுக நாடு) வடக்கே வெகுதூரம் கோதாவிரி ஆறு வரையில் பரவியிருந்தது. இப்போது மகாராட்டிர நாடாக இருக்கிற இடத்தின் தென்பகுதிகள் அக்காலத்தில் கன்னடம் பேசப்பட்ட கன்னட நாடாக இருந்தன. பிற்காலத்தில் மகாராட்டிரர், வடக்கே இருந்த கன்னட நாட்டில் புகுந்து குடியேறினார்கள். காலஞ் செல்லச் செல்ல அந்தப் பகுதி மகாராட்டிர நாடாக மாறிப் போயிற்று. இதன் காரணமாக, மகாராட்டிர பாஷையில் பல கன்னட மொழிச் சொற்கள் கலந்திருப்பதைக் காண்கிறோம்.

இக்காலத்தில் உள்ள கன்னட (மைசூர்) நாட்டின் தென் பகுதிகள் அப்பழங் காலத்தில், தமிழ் நாடாக (வட கொங்கு நாட்டின் பகுதியாக) இருந்தன . வடக்கேயிருந்த கன்னட நாட்டில் மராட்டியர் புகுந்து குடியேறிய போது, கன்னடர் தெற்கு வடகொங்கு நாட்டு எல்லையில் புகுந்து குடியேறினார்கள். மைசூரில் பாய்கிற காவிரி ஆற்றுக்கு வடக்கிலிருந்து வடக்கே கோதாவிரி ஆறு வரையில் பழங் காலத்தில் கன்னட நாடு பரவியிருந்தது என்று கூறுவதற்குக் கன்னட இலக்கண நூல் சான்று கூறுகின்றது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த நிருபதுங்க அரசன் (கி.பி. 850-ல்) இயற்றிய கவிராஜ மார்க்கம் என்னும் கன்னட இலக்கண நூலில், பழங் கன்னட நாட்டின் எல்லை கூறப்படுகின்றது. அதில் கன்னட நாட்டின் அக்காலத் தென் எல்லை மைசூரில்

பாய்கிற காவிரி ஆறு என்று கூறப்படுகின்றது.