பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

இதனால் யானை மலைப் பிரதேசங்களைச் சேர மன்னர் கைப்பற்றி இருந்தார்கள் என்பது தெரிகின்றது. உம்பற் காட்டில் பல ஊர்கள் அடங்கியிருந்தன.

ஓகந்தூர்

இது கொங்கு நாட்டிலிருந்த ஊர். இது இருந்த இடம் தெரியவில்லை. கொங்கு நாட்டையரசாண்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் இந்த ஊரைத் திருமால் கோயிலுக்குத் தானஞ் செய்தான் என்று பதிற்றுப் பத்து ஏழாம் பத்துப் பதிகங் கூறுகிறது.

கருவூர்.

இது கொங்கு நாட்டில் மதிலரண் சூழ்ந்த ஊர். ஆன்பொருநை யாற்றின் கரைமேல் அமைந்திருந்தது. இது சேரரின் கொங்கு இராச்சியத்தின் தலைநகரமாகவும் இருந்தது. சேரர் இந்த நகரத்தைக் கைப்பற்றிய பிறகு, தங்கள் சேர நாட்டுத் தலைநகரமான கருவூரின் பெயரையே இதற்கு இட்டனர் என்று தோன்றுகின்றது. இதற்கு வஞ்சி என்றும் வேறு பெயர் உண்டு. இவ்வூரில் வேண்மாடம் என்னும் பெயருள்ள அரண்மனையை யமைத்துக் கொண்டு ‘இரும்பொறையரசர்’ கொங்கு நாட்டை யரசாண்டனர். இப்போது இந்தக் கருவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கரூர் வட்டத்தில் இருக்கிறது.

ஏறத்தாழ கி.பி. 150 இல் இருந்த தாலமி (Ptolemy) என்பவர் தம்முடைய நூலில் இதைக் கரொவுர (Karoura) என்று கூறுகின்றார். இவ்வூர் உள் நாட்டில் இருந்தது என்றும் கேரொபொத்ரருக்கு (கேரள புத்திரர்க்கு) உரியது என்றும்