பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அரசர் பரம்பரையார் ‘கட்டியர்’ ‘கட்டி’ என்று பெயர் பெற்றிருந்தனர். கட்டி நாட்டின் வட எல்லை வடுக (கன்னட) நாட்டின் எல்லை வரையில் இருந்தது. கட்டி, நாட்டுக்கு அப்பால் மொழி பெயர் தேயம்[1] (வேறு மொழி கன்னட மொழி) பேசும் தேசம் இருந்தது. கட்டி நாடு வடகொங்கு நாட்டில் இருந்தது. கட்டியரசு பரம்பரை விசயநகர அரசர் காலத்திலும் இருந்தது.

காமூர்

இதுவும் கொங்கு நாட்டிலிருந்த ஊர். இங்கு இடையர் வாழ்ந்து வந்தனர். அவர்களின் தலைவன் கழுவுள்.[2] கழுவுளின் காமூரில் பலமான கோட்டையிருந்தது. அது ஆழமான அகழியையும் உயரமான கோட்டை மதிலையும் கொண்டிருந்தது. கொங்கு நாட்டை யரசாண்ட பெருஞ் சேரலிரும்பொறை காமூரை வென்று அதைத் தன்னுடைய இராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டான்.[3] பெருஞ்சேர லிரும்பொறை காமூரை முற்றுகையிட்டபோது பதினான்கு வேளிர்கள் (சிற்றரசர்) அவனுக்கு உதவியாக இருந்தார்கள்.[4]

குதிரைமலை

இது கொங்குநாட்டிலிருந்த மலை. இதை ‘ஊராக்குதிரை’ என்று கூறுகிறார் கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார். (ஊராக் குதிரை—சவாரி செய்ய முடியாத குதிரை. அதாவது குதிரை மலை) ‘மைதவழ் உயர்சிமைக் குதிரைமலை என்று இம்மலையை ஆலம்பேரி சாத்தனார் கூறுகிறார்.[5]


  1. “குல்லைக் கண்ணி வடுகர் முனையது. பல்வேற் கட்டி நன்னாட்டும்பர் மொழி பெயர் தேஏம்”(குறும். 11: 5—7)
  2. ‘கழுவுள் காமூர்’ (அகம். 365: 12) (8-ஆம் பத்து 1: 12: 18: 9-ஆம் பத்து 8: 7-9) (அகம், 135: 11-14)
  3. (அகம். 143: 12)
  4. “குல்லைக் கண்ணி வடுகர் முனையது. பல்வேற் கட்டி நன்னாட்டும்பர் மொழி பெயர் தேஏம்”(குறும். 11: 5—7)
  5. “குல்லைக் கண்ணி வடுகர் முனையது. பல்வேற் கட்டி நன்னாட்டும்பர் மொழி பெயர் தேஏம்”(குறும். 11: 5—7)