பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வழங்குகிற மலை அக்காலத்தில் விச்சிமலை என்று பெயர் பெற்றிருந்தது. சேலம் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் விச்சிமலை (பச்சைமலை) இருக்கின்றது. இந்த மலை ஏறக்குறைய 200 மைல் நீளம் உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்துக்குமேல் ஏறத்தாழ 2000 அடி உயரம் உள்ளது. மலையின் மேலே வேங்கை, தேக்கு, கருங்காலி, சந்தனம் முதலிய மரங்கள் உள்ளன. விச்சி நாட்டு மலைப் பக்கங்களில் பலா மரங்கள் இருந்தன என்று கபிலர் கூறுகிறார்.[1] விச்சி மலைமேல் ‘ஐந்தெயில்’ என்னும் கோட்டையிருந்தது. அது காட்டரண் உடையதாக இருந்தது. விச்சி நாட்டையர சாண்ட பரம்பரையாருக்கு விச்சிக்கோ என்று பெயர் இருந்தது. கொங்குச் சேரனாகிய இளஞ்சேரல் இரும்பொறை, ஐந்தெயில் கோட்டையை வென்று விச்சி நாட்டைக் கைப்பற்றினான் என்று 9 ஆம் பத்துப் பதிகங் கூறுகின்றது.

வெள்ளலூர்

கோயம்புத்தூருக்குத் தென்கிழக்கில் ஐந்துமைல் தூரத்தில் இவ்வூர் இருக்கின்றது. இங்குப் ‘பழங்காலத்துப் பாண்டு குழிகள்’ உள்ளன. இந்தப் பண்டவர் குழிகளிலிருந்து முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. 1842 ஆம் ஆண்டில் இவ்வூரில் பழங்காசுப் புதையல் ஒரு மண்பாண்டத்தில் கிடைத்தது. அப்பு தையலில் 522 உரோம் தேசத்து நாணயங்கள் இருந்தன. அந்தக் காசுகளில் உரோமாபுரிச் சக்ரவர்த்திகளான அகஸ்தஸ், தைபீரியர், கலிகுல்லா, கிளாடியஸ் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவை கி. பி. முதல் நூற்றாண்டில் வழங்கப்பட்ட காசுகள். இதிலிருந்து அக்காலத்தில் இந்த ஊரில் யவனருடன் வியாபாரத் தொடர்பு இருந்தது என்பது தெரிகின்றது.


  1. (புறம். 200. 1-2)