பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

வையாவிநாடு

இது கொங்கு நாட்டின் தென்கோடியில் இருந்தது. ஆவிநாடு என்றும் வையாவி நாடு என்றும் பெயர் பெற்றிருந்தது. பிற்காலத்தில் வைகாவூர் என்றும் வையாபுரி என்றும் பெயர் வழங்கப்பட்டது. இது இப்போது மதுரை மாவட்டத்து மதுரை வட்டத்தில் இருக்கின்றது. பழனி மலை வட்டாரம் பழைய வையாவி நாடாகும். வையாவி நாட்டின் தலைநகரம் பொதினி. ஆவி (வையாவி) நாட்டையாண்ட அரசர் ‘வேள் ஆவிக் கோமான்’ என்று பெயர் பெற்றனர்.[1] பொதினி என்னும் பெயர் இப்போது பழனி என்று மருவி வழங்குகிறது. வேள் ஆவி அரசர்கள் சேர அரசர், பரம்பரையில் பெண் கொடுத்து உறவு கொண்டார்கள். வையாவிக் கோப்பெரும் பேகனும், வேள் ஆவிக் கோமான் பதுமனும் இவ்வூரை ஆண்ட அரசர்கள். வையாவிக் கோப்பெரும் பேகனை அவன் மனைவி கண்ணகி காரணமாகப் பரணர், கபிலர், வன்பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார், நல்லூர் நத்தத்தனார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். இதனால் இவர்கள் சமகாலத்தில் இருந்தவர்கள் என்பது தெரிகின்றது. வேளாவிக்கோமான் பதுமனுடைய மகள் ஒருத்தியைக் குடக்கோ நெடுஞ்சேரலன் மணஞ் செய்திருந்தன். (4 ஆம் பத்து பதிகம், 6 ஆம் பத்து பதிகம்) இன்னொரு மகளைச் செல்வக் கடுங்கோ வாழியாதன் (குடக்கோ நெடுஞ் சேரலாதனின் தாயாதித் தம்பி) மணஞ் செய்திருந்தான். (8 ஆம் பத்து பதிகம்)

கொல்லி மலையும் கொல்லிக் கூற்றமும்

கொங்கு நாட்டுப் பேர்போன கொல்லி மலையைச் சங்கச் செய்யுள்கள் கூறுகின்றன. கொல்லி மலையை இந்தக்


  1. “முருகன் நன்பேர் நெடுவேள் ஆவி, அறுகோட்டியானைப் பொதினி” (அகம். 1:3-4) “முழவுதழ் திணிதோள் நெடுவேள் ஆவி, பொன்னுடைய நெடுநகர்ப் பொதினி” (அகம். 61:15-16)