பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

 அரும்பத உரையாசிரியர் எழுதுகிறார். மீண்டும் வாழ்த்துக் காதையில், கண்ணகியார் கடவுள் நல்லணி காட்டிய செய்யுளில்,

"வென்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்
என்னோடுந் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்”

என்று கூறுகின்றார். இதற்கு உரை எழுதிய பழைய அரும்பத உரையாசிரியர் "வென்வேலான்குன்று- செங்கோடு. நான் குன்றில் வந்து விளையாடுவேன்; நீங்களும் அங்கே வாருங்களென்றாள்” என்று விளக்கங் கூறுகிறார்.

இதனால், அரும்பதவுரையாசிரியர் காலத்தில் கண்ணகி யார் உயிர்விட்ட இடம் திருச்செங்கோடுமலை என்ற செவி வழிச் செய்தி இருந்தது என்பது தெரிகின்றது. கொங்குச் சேர நாட்டில் பத்தினிக் கோட்டம் அமைத்து விழா செய்த பிறகு நாங்களும் கொங்கு நாட்டில் கண்ணகிக்கு விழா செய்தார்கள் என்று சிலப்பதிகார உரைபெறு கட்டுரை கூறுகின்றது. கொங்கிளங்கோசர் கண்ணகிக்குக் கோயில் எடுத்ததும் திருச்செங்கோட்டு மலையில் என்று தோன்றுகிறது.

பழைய அரும்பதவுரையாசிரியருக்குச் சில நூற்றாண் டுக்குப் பிறகு இருந்த அடியார்க்கு நல்லார் என்னும் சிலப்பதி கார உரையாசிரியர், கண்ணகியார் உயிர் நீத்த இடம் திருச்செங்கோடுமலை என்று அரும்பதவுரையாசியர் கூறியிருப் பதை மறுக்கிறார். சிலப்பதிகாரப் பதிகம் மூன்றாவது அடியில் வரும் 'குன்றக் குறவர்' என்பதற்கு உரை எழுதுகிற அவர் கண்ணகியார் உயிர் விட்ட இடம் சேர நாட்டில் உள்ள செங்குன்று என்றும், கொங்கு நாட்டுத் திருச்செங்கோடு அன்று என்றுங் கூறுகிறார். அவர் எழுதுவது : “குன்றக்