பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

“மரம்பயில் சோலை மலியப் பூழியர்
உருவத் துருவின் நாள் மேய லாரும்
மாரி எண்கின் மலைச் சுரம்.”

(நற். 192:3-5)

(துரு-ஆடு மாடுகள். எண்கு -கரடி. சுரம்-காட்டு வழி)

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய தம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் (நார்முடிச் சேரலுக்கும் பேரன் செங்குட்டுவனுக்கும் ஆடு கோட்பாட்டுச் சேரலாத னுக்கும் சிற்றப்பன்) பூழியர்கோ (பூழி நாட்டின் அரசன்) என்று கூறப்படுகிறான். (3-ஆம் பத்து 1:20-23) இவன் பூழி நாட்டையாண்ட தோடு கொங்கு நாட்டின் சில ஊர்களை வென்றான். பூழி நாட்டை 25 ஆண்டு அரசாண்ட பிறகு இவன் அரசைத் துறந்து காட்டுக்குத் தவஞ் செய்யப் போய் விட்டான். (3-ஆம்பத்து பதிகம்)

ஆதிகாலம் முதல் சேரருக்கு, உரியதாக இருந்த பூழி நாட்டை அதன் வடக்கிலிருந்த துளுநாட்டு நன்னன் கைப் பற்றிக் கொண்டான். அதனால், சேரர் தாங்கள் இழந்த பூழிநாட்டை மீட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. சேர நாட்டை யரசாண்ட களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (சேரன் செங்குட்டுவனுடைய தமயன்) நன்னனோடு போர் செய்து அவனை வென்றுத் தனக்குக் கீழடக்கிக் கொண்ட தோடு அவன் கைப்பற்றியிருந்த பூழிநாட்டையும் மீட்டுக் கொண்டான்.

“ஊழின் ஆகிய உயர் பெருஞ் சிறப்பில்
பூழிநாட்டைப் படையெடுத்துத் தழீஇ
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை யறுத்து.”

(4-ம் பத்து, பதிகம்)