பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


கொங்குநாட்டுக் குறு நில
மன்னர்கள்

2

அதிகமான் அரசர்

கொங்கு நாட்டைச் சேர அரசர் கைப்பற்றுவதற்கு முன்பு அந்நாட்டைப் பல சிற்றரசர் பரம்பரை யரசாண்டு கொண்டிருந்தது. அச் சிற்றரசர்களைப் பற்றி நமக்குத் தெரிந்த வரையில் கூறுகின்றோம். கொங்கு நாட்டை யரசாண்ட சிற்றரசர்களில் தகடூரை யரசாண்ட அதிகமான் அரசர் பேர்போனவர் அவர்கள் அதிகமான் என்றும், அதியமான் என்றும் கூறப்பட்டனர். தகடூர் இப்போது தர்மாபுரி என்று பெயர் கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாமாபுரி வட்டமே பழைய தகடூர் நாடு. தகடூர் அதிகமான் அரசர் தகடூரில் கோட்டைக் கட்டிக் கொண்டு அரசாண்டார்கள். அது அதிக மான் கோட்டை என்று பெயர் பெற்றிருந்தது. அதிகமான் கோட்டை என்பது பிற்காலத்தில் ‘அதமன் கோட்டை’ என்று சிதைந்து வழங்கப்பட்டது. இந்த அதிகமான் கோட்டை தகடூரிலிருந்து (தர்மாபுரியிலிருந்து) தென்மேற்கே 5 மைல் தூரத்திலிருக்கின்றது. சேலத்திலிருந்து வடக்கே 29 மைலில் இருக்கிறது.