பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

நெடுமிடலுடன் போர் செய்து அவனை வென்றார்கள் என்று பரணர் கூறுகிறார்.[1] இந்த அதிகமான் நெடுமிடல் அஞ்சியும் பசும்பூண்பாண்டியனும் நண்பர்கள் என்பது அகம் 162-ஆம் செய்யுளினால் தெரிகின்றது.[2]

(குறிப்பு: இந்தப் பசும்பூண்பாண்டியன் தலயாலங் கனத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாகிய பசும்பூண் செழியன் அல்லன், இவனுக்கு முன்பு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் காலத்திலிருந்தவன். இரண்டு பசும்பூண் பாண்டியரில் முதல் பசும்பூண் பாண்டியன் அதிகமான் நெடுமிடல் அஞ்சியின் காலத்திலிருந்தவன்).

பசும்பூண் பாண்டியன் துளுநாட்டு நன்னன்மேல் படையெடுத்துச் சென்றான். அவனுடைய படைக்குச் சேனாபதியாக இருந்தவன் அதிகமான் நெடுமிடல் அஞ்சி. துளுநாட்டு வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் துளுநாட்டுச் சேனாபதியாகிய மிஞிலிக்கும் நெடுமிடல் அஞ்சிக்கும் போர் நடந்தது. அந்தப் போரில் நெடுமிடல் அஞ்சி இறந்து போனான்.[3]


  1. யாழிசை மறுகின் நீடூர் கிழவோன், வாய்வான் எவ்வி ஏவல் மேவார், நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பெருந்தலர், அரிமணவாயில் உறந்தூர்” (அகம், 288:10-13).
  2. சுழல்தொடி அதிகன், கோளற, வறியாப், பயங்கெழு பலவின், வேங்கை சேர்த்த வெற்பகம் பொலிய, வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன், களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர, ஒவிறுவன இழ் தரும் உயர்ந்து தோன்றருவி" (அகம். 162:18-29).
  3. கறையடி யானை நன்னன் பாழி, ஊட்டரு மரபின் அஞ்சுவர போய்க், கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேமமாகிய பெரும்பெயர், வெள்ளாத்தானை அதிகன் கொன்று வந்து, ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பு" (அகம். 142:9-14) கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூண்பாண்டியன், வினைவல் அதிகன், களிறெடுபட்ட ஞான்றை ஒளிறுவாள் கொண்கர் ஆர்ப்பு.” (குறும், 393:3-6).