பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

இப்போது பெயர் பெற்றுள்ள மலையே பழைய விச்சிமலை என்று கருதுகிறார்கள். பச்சைமலை இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கின்றது. விச்சியரசரைக் ‘கல்லக வெற்பன்’ என்றும் ‘விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக்கோ’ என்றும் கபிலர் கூறுகின்றார். விச்சிமலைமேல் இருந்த ஐந்தெயில் என்னும் கோட்டையில் விச்சியரசர் வாழ்ந்தார்கள். விச்சி நாட்டில் குறும்பூர் என்னும் ஊர் இருந்தது. அங்குப் பாணர் என்னும் இனத்தார் வசித்து வந்தார்கள். விச்சி மன்னன் பகைவரோடு போர் செய்தபோது, அவன் புவி போன்று வீரமாகப் போர் செய்ததைப் பாணர்கள் கண்டு ஆரவாரஞ் செய்து மகிழ்ந்தார்கள் என்று பரணர் கூறுகின்றார்.[1]

பாரி வள்ளல் போரில் இறந்த பிறகு, அவனுடைய பரம்பு நாட்டைப் பகைமன்னர் கைக்கொண்ட பின்னர், பாரியின் மகளிரான அங்கவை சங்கவை என்பவரைக் கபிலர் அழைத்துக்கொண்டு விச்சிக்கோவிடம் வந்து அவர்களைத் திருமணஞ் செய்து கொள்ளும்படி கேட்டார். அதற்கு விச்சியரசன் இணங்கவில்லை. (புறம். 200 அடிக் குறிப்புக் காண்க.) விச்சியரசன் தம்பி இளவிச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தான்.

சுதந்திரமாக அரசாண்டு கொண்டிருந்த விச்சியரசரை இளஞ்சேரல் இரும்பொறை வென்று விச்சி நாட்டைத் தன்னுடைய கொங்கு இராச்சியத்தோடு இணைத்துக் கொண்டான். விச்சியரசனுடைய ஐந்தெயில் கோட்டையை இளஞ்சேரல் இரும்பொறை முற்றுகையிட்டபோது விச்சியரசர்களுக்குப்


  1. “வில்கெழு தானை விச்சியர் பெருமகன், வேந்தரோடு பொருத ஞான்றைப் பாணர், புலிநேர் குறழ் நிலகண்ட, கலிகெழு குறும்பூர் ஆர்ப்ப ” (குறும் 326:5-8)