பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

கட்டியரசர், கொங்கு நாட்டையாண்ட பொறைய அரசருக்குக் கீழடங்கியிருந்தனர் என்று தோன்றுகின்றனர். கட்டி பரம்பரையார் மிகமிகப் பிற்காலத்திலும், விசயநகர அரசர் ஆட்சிக் காலத்திலும் இருந்தார்கள். இக் காலத்தில் அவர்கள் கெட்டி முதலியார் என்று பெயர் பெற்றிருந்தார்கள். கட்டி என்னும் பெயரே பிற்காலத்தில் கெட்டி என்று மருவியது.

குதிரைமலைக் கொற்றவர்

கொங்கு நாட்டில் குதிரைமலையும் அதனை அடுத்து முதிரம் என்னும் ஊரும் இருந்தன. பிட்டங்கொற்றன் என்பவன் இங்குச் சிற்றரசனாக இருந்தான். இவன் சேரனுடைய சேனாதிபதி என்றும் வள்ளல் என்றும் ஆலம்பேரி சாத்தனார் கூறுகிறார். குதிரை மலைக் கொற்றன் ஈகைக் குணம் உடையவன் என்று கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் கூறுகிறார்.[1] இவன் வானவனுடைய (சேரனுடைய) மறவன் என்றும் போர் செய்வதில் வல்லவன் என்றும் கூறப்படுகிறான்.[2] வடம வண்ணக்கன் தமோதரனார், பிட்டங் கொற்றனையும், அவனுடைய அரசனான கோதையையும் கூறுகிறார்.[3] மாவண் ஈகைக் கோதையும்


  1. “வசையில் வெம்போர் வானவன் மறவள், தசையில் வாழ்தர்க்கு தன்கலம் சுரக்கும். பொய்யா வாய்வாள் புனே கழல் பீட்டன். மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன், அகலறை நெடுஞ்சுனை” (அகம் 143: 10: 14)
  2. “ஊராக் குதிரைக் கிழவ கூர்வேல்...கைவள் ஈகைக் கடுமான் கொற்ற” (புறம். 188: 14, 17' ஊராக்குதிரை-குதிரைமலை) வானவன் மறவன் வணங்கு விற்றடக்கை, ஆனா தறவின் வண்மகிழ்ப் பிட்டன் (அகம். 17-15-18)
  3. “வன்புல நாடன் வயமான் பிட்டன், அரமர் கடக்கும் வேலும் அவன் இறை, மாவளி ஈகைக் கோதையும் மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே” (புறம்: 172. 8. 11) உறையூர் மருத்துவன் தாமோதரனாரும் (புறம். 170: 6- 8) காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ண னாரும் (புறம், 189, 171) இவனைப் பாடியுள்ளனர்.