பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VI

கிடைத்திருக்கிற பிராமி எழுத்துச் சாசனங்களும் அக்காலத்து அரசரைப் பற்றிய செய்திகளைக் கூறவில்லை யாகையால் இவையும் நமக்கு அதிகமாகப் பயன்படவில்லை. ஆனால், இந்தச் சாசன எழுத்துகள் அக்காலத்துச் (மத) சமயங்கள் சம்பந்தமாகவும் சமூக வரலாறு சம்பந்தமாகவும் நமக்குப் பயன்படுகின்றன. கொங்குநாட்டில் கிடைத்துள்ள பெரும்பான்மையான பிற்காலத்து வட்டெழுத்துச் சாசனங்கள் நம்முடைய பழங்கால ஆராய்ச்சிக்குப் பயன்படவில்லை.

நூமிஸ்மாட்டிக்ஸ் என்னும் பழங்காசுச் சான்றுகள் கிடைத்திருக்கிற போதிலும், இவை கொங்கு நாட்டுக்கேயுரிய பழங்காசுகளாக இல்லாமல், உரோமாபுரி நாணயங்களாக இருக்கின்றன. எனவே, இந்தப் பழங்காசுகளிலிருந்து கொங்கு நாட்டின் பழைய சரித்திரத்தையறிய முடியவில்லை. ஆனால், இந்த ரோமாபுரிப் பழங்காசுகள் அக்காலத்துக் கொங்கு நாட்டின் வாணிக வரலாற்றையறியப் பயன்படுகின்றன.

இவ்வளவு குறைபாடுகள் உள்ள நிலையில் கொங்கு நாட்டின் பழைய சரித்திரத்தை எழுத வேண்டியிருக்கிறது. இப்போது கிடைத்துள்ள ஒரே கருவி சங்க இலக்கியங்கள் மட்டுமே. சங்க இலக்கியம் என்பவை எட்டுத்தொகை நூல்களாகும்.

அகநானூறு, புறநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை நானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை என்பவை எட்டுத் தொகை நூல்களாம். எட்டுத் தொகையில் பதிற்றுப்பத்தும், புறநானூறும், அகநானூறும், நற்றிணையும் ஆகிய நான்கு நூல்கள் கொங்கு நாட்டுப் பழைய சரித்திர ஆராய்ச்சிக்குப் பயனுள்ளவையாக இருக்கின்றன, இந்த நான்கு நூல்களின் உதவியும் சான்றும் இல்லாமற்போனால் கொங்குநாட்டின் பழைய வரலாறுகள் கொஞ்சமும் தெரியாமல் அடியோடு மறைந்து போயிருக்கும். நற்காலமாக இந்த நூல்களில் கொங்குநாட்டின் பழைய வரலாற்றுச் செய்திகள் அங்கும் இங்குமாகக் காணப்படுகின்றன. அவை முறையாக-