பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த எருமையூர் பிற்காலத்தில் மகிஷு (மைசூர்) என்றாயிற்று என்று கருதுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று என்று இவர் எழுதுகிறார். எருமையூரைக் கூறுகிற சங்கச் செய்யுள் புன்னாடு முதலிய வேறு ஊர்ப் பெயர்களைக் கூறவில்லை, ஆகையால் எருமையூர் என்று சங்கச் செய்யுள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார். புன்னாட்டின் பெயரைச் சங்க இலக்கியம் கூறவில்லை என்று இவர் கூறுவது வியப்பாக இருக்கிறது. புன்னாட்டின் பெயரைச் சங்கச் செய்யுள் கூறுவதை மேலே காட்டியுள்ளோம். சாலிதொரெ அவர்கள் உண்மையறியாமல் தவறாக எழுதியிருக்கிறார். எருமையூரைக் கூறுகிற சங்கச் செய்யுள் புன்னாட்டையும் கூறுகிறது.

கோசர்

கோசர் என்னும் ஓர் இனத்தவர் போர் செய்வதையே தங்களுடைய குலத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்திருந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். அவர்களுடைய தாய்நாடு, அக்காலத்தில் தமிழ்நாடாக இருந்த துளு நாடு. துளுநாட்டைத் தாய்நாடாகக் கொண்டிருந்த இவர்கள் பாண்டிநாடு, சோழநாடு, கொங்கு நாடு முதலிய பல நாடுகளிலும் பரவியிருந்தார்கள். இவர்கள் தமிழ்நாட்டு அரசரின் கீழே அவர்களுடைய படைகளில் சேர்ந்திருந்தார்கள்! சில சமயங்களில், குடிமக்கள் அரசருக்குச் செலுத்த வேண்டிய இறைப் பணத்தை வசூல் செய்யும் சேவகர்களாகவும் இருந்தார்கள். இந்த முறையில் சில ஊர்களில் இவர்களில் சிலர் ஊராட்சியினராகவும் இருந்தனர். எண்ணிக்கையில் சிறு தொகையினராக இருந்தும் இவர்கள் தமிழகமெங்கும் பேர் பெற்றிருந்தார்கள். போருக்கு அஞ்சாத இவர்கள் ஆற்றலும் உறுதியும் கண்டிப்பும் உடையவர்களாக இருந்தனர். இவர்கள் குறுநிலமன்னர் அல்லர். ஆனாலும், நாட்டில் இவர்களுக்கு அதிகச் செல்வாக்கு இருந்தது. போர்ப் பயிற்சியே இவர்களுடைய குலத்தொழில். குறிதவறாமல் வேல் எறிவதிலும் அம்பு எய்வதிலும் கை