பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தேர்ந்தவர்கள். கோசர் குலத்து இளைஞர்கள், உயரமான மரக்கம்பத்தை நிறுத்தி அதன் உச்சியைக் குறியாகக் கொண்டு வேல்களை (ஈட்டிகளை) எறிந்து பழகினார்கள்; அம்புகளை எய்து பயின்றார்கள். ஓங்கியுயர்ந்து வளர்ந்த முருக்க மரத்தின் பக்கக் கிளைகளை வெட்டிக் களைந்து நீண்ட நடுமரத்தை மட்டும் வைத்துக்கொண்டு வேல் எறிந்தும் அம்பு எய்தும் போட்டி போட்டுப் பழகினார்கள்.[1] போர்க்களத்தில் உயிருக்கு அஞ்சாமல் போர் செய்து வெற்றியடைந்தனர்.[2] போர்க்களத்தில் ஆயுதங்களினால் காயமடைந்ததனால் இவர்களுடைய முகத்தில் வடுக்கள் இருந்தன.[3] உடம்பு முழுவதும் நகைகளை அணிந்திருந்தார்கள். இவர்கள் புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.[4]

கோசர் தமிழ்நாட்டுக்கு அப்பால் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர் என்று சிலர் கருதுகின்றனர்.[5] இது தவறு. கோசரின் தாய்நாடு துளுநாடு. “மெய்ம்மலி பெரும்பூண் செம்மற் கோசர், கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாகலார்கைப் பறைக்கட் பீலித், தோகைக் காவின் துளுநாடு” (அகம் 15:2-5) துளுநாட்டுச் செல்லூருக்குக் கிழக்கில், இவர்கள் இருந்தார்கள். “அருந்திறற் கடவுள் செல்லூர்க்குணா அது, பெருங்கடல் முழக்கிற்றாகி யாணர். இரும்பிடம்படுத்த வடுவுடை முகத்தர், கருங்கட் கோசர் நியமம்.” (அகம். 90: 9-12) துளுநாட்டு நாலூரிலும் இவர்கள் இருந்தார்கள்.


  1. “வென்வேல், இளம்பல் கோசர் விளங்குபடை கண்மார், இகலினர் எறிந்த அகலிலை முருக்கின், பெருமரக் கம்பம்.”(புறம் 189-8-11)

  2. “கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்” (மதுரைக்காஞ்சி, 773)

  3. “இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்” (அகம் 90:1)

  4. “மெய்ம்ம லி பெரும்பூண் செம்மல் கோசர்” (அகம் 15:2)
    “வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல்லிசை, வளங்கெழு கோசர்” (அகம் 205:3-20).

  5. P. 87. Ancient India and South Indian History and Culture Yell. Dr. S. Krishnaswami Aiyengar.